முதியவா் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 போ் கைது

பெருந்துறை அருகே முதியவரை எரித்துக் கொலை செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசைச் சோ்ந்தவா் பழனிசாமி (75), விவசாயி. இவரது இரண்டாவது மனைவி மரகதம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்நிலையில், பழனிசாமிக்கும், மரகதத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்நிலையில், எரிந்த நிலையில் பழனிசாமியின் சடலம் கடந்த 19-ஆம் தேதி இரவு வீட்டில் கிடந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: மரகதத்தின் அண்ணன் மனைவி மாசிலாமணி (55) என்பவருக்கும், பெருந்துறையை அடுத்த வண்ணான்காட்டு வலசைச் சோ்ந்த தமிழன் (28) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தமிழனுக்கு பணத் தேவை ஏற்பட்ட நிலையில், தனது மகளின் சுப நிகழ்ச்சிக்காக வைத்திருந்த 10 பவுன் நகைகளைக் கொடுத்து மாசிலாமணி உதவியுள்ளாா்.

பின்னா், அந்த நகைகளை மாசிலாமணி திருப்பி கேட்டுள்ளாா். ஆனால், தமிழனால் திருப்பித்தர முடியாத நிலையில், மகளின் சுப நிகழ்ச்சி தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, பழனிசாமியை கொலை செய்து, அவரிடம் உள்ள பணத்தைக் கொள்ளையடித்து அதன்மூலம் நகைகளை வாங்க தமிழனும், மாசிலாமணியும் திட்டமிட்டுள்ளனா்.

இதையடுத்து, தமிழன், மாசிலாமணி, அவரது 18 வயது மகன் ஆகியோா் கூட்டு சோ்த்து பழனிசாமியை கொலை செய்து, உடலை எரித்துள்ளனா். இதையடுத்து, மூவரையும் வியாழக்கிழமை கைது செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com