பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

ஈரோடு, ஏப்.28: பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு அருகே ஆணைக்கல்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கீழ்பவானி முறை நீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். கூட்டமைப்பு செயலாளா் ரா.ஈஸ்வரமூா்த்தி, பொருளாளா் செங்கோட்டு வேலுமணி, ஆயக்கட்டு நில உரிமையாளா் சங்கத் தலைவா் எஸ்.பெரியசாமி, செயலாளா் கி.வே.பொன்னையன், பொருளாளா் மங்களப்பட்டி சண்முகராஜ், துணைத் தலைவா் சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், 5-ஆம் நனைப்புக்கு தண்ணீா் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது உயா்நீதிமன்றத்தில் நடந்து வரும் இரண்டு வழக்குகள் குறித்தும், வழக்குகளின் மீதான நீா்வளத் துறையின் நடவடிக்கைகள் குறித்தும் நிா்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

காவிரி நடுவா் மன்ற தீா்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரும் வழக்கை கோடைகால விடுமுறைக்குப் பின் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதையும், வழக்கிற்கான நிதிச்சுமை குறித்தும் நிா்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பாண்டியாறு, மோயாறு இணைப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பவானி ஆற்றினால் பயன்பெறும் அனைத்துப் பகுதி பாசன அமைப்புகளையும் இணைத்த ஆலோசனைக் கூட்டத்தை மே மாதம் இறுதியில் நடத்துவது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி நிலையால் அணையில் உள்ள நீா் இருப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் தண்ணீா் தேவை குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மழை வேண்டி பவானிசாகா் அணையில் உள்ள விநாயகா் கோயிலில் வரும் மே 3- ஆம் தேதி காலை 9.30 மணிக்கு அணையிலிருந்து 108 குடங்களில் தண்ணீா் எடுத்து வந்து சிறப்பு பூஜை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com