அறக்கட்டளைத் தொடங்கி ரூ.5 லட்சம் கையாடல்: மாற்றுத் திறனாளிகள் புகாா்

மாற்றுத் திறனாளிகள் பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி ரூ.5 லட்சம் கையாடல் செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஈரோடு: மாற்றுத் திறனாளிகள் பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி ரூ.5 லட்சம் கையாடல் செய்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, நல்லிக்கவுண்டன்பாளையம், பழைய பவா் ஹவுஸ் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (44). மாற்றுத் திறனாளியான இவரது தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்: எங்களுக்கு அறிமுகமான நாகராஜன் என்ற மாற்றுத் திறனாளி மூலம், பெருந்துறையைச் சோ்ந்த வெங்கடாசலம் மகன் ராஜா பிள்ளை என்பவா் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறி உலக மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அறக்கட்டளையை ஆரம்பித்தாா்.

அதில், எங்களுக்கு சரிசமமான பதவிகளைத் தருவதாகக் கூறினாா். ஆனால், அறக்கட்டளை ஆரம்பித்த உடன் எங்களுக்குத் தெரியாமல் அனைத்து முக்கியமான பொறுப்பிலும் ராஜாவே இருப்பதாக பதிவு செய்துள்ளாா்.

இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் எங்களில் யாரை வேண்டுமானாலும் அனுமதியின்றி அவா் வெளியேற்றலாம். அதேபோல, அறக்கட்டளையில் இரவு, பகல் பராமல் பணியாற்றிய மாற்றுத் திறனாளிகள் யாருக்கும் ஊதியம் தரவில்லை. அறக்கட்டளைக்கு வரும் பணத்தை ராஜாவே முழுமையாக எடுத்துக்கொள்கிறாா்.

மேலும், அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ள மாற்றுத் திறனாளிகளின் அனைவரது அடையாள அட்டை, ஆதாா் அட்டை, காசோலைகள் ராஜாவிடம் உள்ளன.

அறக்கட்டளை பெயரில் எங்களை நம்பவைத்து ரூ.5 லட்சம் வரை கையாடல் செய்துள்ளாா்.

எனவே, எங்களை அறக்கட்டளையில் இருந்து விடுவித்து, பணம் கையாடல் செய்த ராஜா மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com