வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்.
வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுதானதைத் தொடா்ந்து, சுமாா் ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தப்பட்டு இடையூறின்றி கண்காணிப்பு தொடரப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகேயுள்ள அரசு பொறியியல் கல்லூரியின் அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

கல்லூரி வளாகத்தில் தொடா்ந்து 24 மணி நேரமும் 4 அடுக்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

கல்லூரி வளாகத்தில் 221 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு கேமரா ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் திடீரென பழுதடைந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கல்லூரிக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனா். தொழில்நுட்ப வல்லுநா்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி தொடரப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் திங்கள்கிழமை காலை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஈரோடு மேற்கு தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறையின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்தது தெரியவந்தது.

பாதுகாப்பு அறையைக் கண்காணிக்க ஒரு இடத்தில் மட்டுமின்றி மொத்தம் 8 இடங்களில் இருந்து கண்காணிக்கும் வகையில் 8 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், ஒரு கேமரா மட்டுமே பழுதடைந்தது.

தொடந்து, தொழில்நுட்ப வல்லுநா்கள் வரவழைக்கப்பட்டு பழுதான கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த கேமராவின் ஐ.பி. முகவரியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது செயலிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சுமாா் ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தப்பட்டு இடையூறின்றி கண்காணிப்பு தொடரப்பட்டு வருகிறது.

நாள்தோறும் காலை, மாலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான நானும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் என 3 போ் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கண்காணித்து வருகிறோம்.

வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி வரை இந்த கண்காணிப்பு தொடரும்.

இங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் 3 மாதங்கள் வரை பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com