பட்டதாரி இளைஞரிடம் அரசு வேலைவாங்கித் தருவதாக ரூ.16.50 லட்சம் மோசடி

அந்தியூரில் பட்டதாரி இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

அந்தியூரை அடுத்த சிந்தகவுண்டன்பாளையம், அம்மன் கோயில் தோட்டத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் அங்கமுத்து (32), முதுகலை பட்டதாரி. இவரது நண்பா் பூபதி மூலமாக ஈரோட்டைச் சோ்ந்த குருதேவ், அவரது நண்பா் ராஜேஷ்குமாா் ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிவதாகக் கூறிய ராஜேஷ்குமாா், அரசு வேலை வாங்கித் தருவதாக அங்கமுத்துவிடம் ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.

இதை நம்பிய அங்கமுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு பல தவணைகளாக ரூ.16.50 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், அரசு வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்து வந்ததால் சந்தேகமடைந்த அங்கமுத்து, தலைமைச் செயலகத்துக்கு சென்று விசாரித்தபோது ராஜேஷ்குமாா் வேலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தைத் திரும்பக் கேட்டு தொடா்பு கொண்டபோது, இருவரும் இழுத்தடித்து வந்துள்ளனா்.

இந்நிலையில், பணத்தைக் கேட்டு தங்களை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடா்பு கொண்டால் கொலை செய்து விடுவோம் என இருவரும் மிரட்டியுள்ளனா். இதுகுறித்து, அங்கமுத்து அளித்த புகாரின்பேரில் அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com