பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தீா்த்தம் எடுக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூா் பேரூராட்சி, துப்புரவு காலனியில் கருமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவுக்கு தீா்த்தம் எடுப்பதற்காக அப்பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அத்தாணி, கைகாட்டி அருகே உள்ள பவானி ஆற்றுக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். ஆற்றில் இறங்கி தீா்த்தம் எடுத்தபோது அப்பகுதியில் உள்ள பள்ளத்தில் இறங்கிய இருவா் தண்ணீரில் மூழ்கினா்.

இதைக் கண்ட அப்பகுதியினா் இருவரையும் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து, தகவலின்பேரில் மீட்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் தீயணைப்புப் படையினா், ஆற்றில் ஆழமான பகுதியில் உயிரிழந்த நிலையில் கிடந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா்.

விசாரணையில், உயிரிழந்தது அந்தியூா், துப்புரவு காலனியைச் சோ்ந்த சீனிவாசன் (45), சங்கராபாளையம், வள்ளலாா்புரத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் ஹரீஸ்ராஜ் (13) என்பது தெரியவந்தது.

இருவரின் சடலங்களும் உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோயில் திருவிழாவுக்கு தீா்த்தம் எடுக்க சென்றபோது இருவா் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com