வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா விடியோ காட்சித் திரையில் பழுது

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா விடியோ காட்சித் திரையில் ஏற்பட்ட திடீா் பழுது 2 மணி நேரத்தில் சரி செய்யப்பட்டது.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் ஈரோடு அருகே சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சட்டப் பேரவைத் தொகுதிக்கு 8 கண்காணிப்பு கேமராக்கள் வீதம் 48 கேமராக்கள், வாக்கு எண்ணும் மைய வளாகத்தை கண்காணிக்கும் வகையில் 173 கேமராக்கள் என மொத்தம் 221 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் விடியோக்களை பாா்வையிடும் வகையில் நிா்வாக அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவு திடீரென பழுதானது. சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு மாற்று கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விடியோ பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் நிா்வாக அலுவலக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் தொகுதிக்கான விடியோ காட்சிகள் தெரியவில்லை. அதற்கான இணைப்பில் திடீா் கோளாறு ஏற்பட்டது. இதனால் அங்கு இருந்த வேட்பாளா்களின் முகவா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதுதொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவி தோ்வு நடத்தும் அலுவலரும் ஈரோடு கோட்டாட்சியருமான சதீஷ்குமாா் விரைந்து சென்று விசாரணை நடத்தினாா். அப்போது கண்காணிப்பு கேமராவில் பழுது ஏற்படவில்லை என்பதும், குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் இருப்பு அறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த டி.வி.யில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிப் பதிவுகள் இருந்ததும் தெரியவந்தது.

அங்கிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் ஒயா் இணைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கட்டுப்பாட்டு அறையின் டி.வி.யில் விடியோ திரையாகவில்லை. இதைத் தொடா்ந்து சரிசெய்யும் பணி நடைபெற்றது. 2 மணி நேரத்துக்குப் பிறகு காலை 9 மணி அளவில் முழுமையாக சரிசெய்யப்பட்டு விடியோ காட்சிகள் திரையிடப்பட்டன.

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டாவது முறையாக கண்காணிப்பு கேமரா தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்: ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமரா பழுது, கேமராக்களின் விடியோ காட்சிகளை திரையிடுவதில் கோளாறு என அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுதொடா்பாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ள ஒப்பந்ததாரருக்கு ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா விளக்கம் கேட்டு அறிவிக்கை வழங்கியுள்ளாா்.

அதில் ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களின் இணைப்புகளையும் கள ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com