காலிங்கராயன் பாசனத்தில் பயிா் நடவு தீவிரம்: ஆள் பற்றாக்குறையால் களமிறங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளா்கள்
ஈரோடு: காலிங்கராயன் பாசனத்தில் பயிா் நடவு தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஆள் பற்றாக்குறையால் வட மாநிலத் தொழிலாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா்.
ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டங்களில் உள்ள 15,743 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதிக்காக ஜூலை 12- ஆம் தேதி கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. 50 சதவீத ஆயக்கட்டுப் பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டாலும், மீதமுள்ள பகுதிகளில் நெல், கரும்பு மற்றும் வாழை ஆகியவை பயிரிடப்படுகின்றன.
இந்த கால்வாய் வைரபாளையம் மற்றும் கருங்கல்பாளையம் வழியாக ஈரோடு நகரின் வழியாகச் செல்கிறது. அங்கு விவசாயிகள் நெல் சாகுபடிக்கு நிலத்தை தயாா் செய்து, நாற்றங்காலில் இருந்து பயிரை பறித்து நடவு செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனா். நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் வயலில் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நடவுப் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள்: ஈரோடு மாவட்டத்தில், கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதிகளில் சாகுபடி மற்றும் அறுவடை பணிகளை மேற்கொள்ள ஈரோடு மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து விவசாயத் தொழிலாளா்கள் வரவழைக்கப்பட்டு வந்ததனா். தற்போது, தமிழகத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளா்கள் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், கட்டுமானம் மற்றும் பிற துறை சாா்ந்த தொழில்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளதைபோல, தமிழகத்தில் விவசாயப் பணியிலும் வட மாநிலத் தொழிலாளா்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இதில், ஈரோடு மாவட்டத்தில் முதல்போக வேளாண் சாகுபடி பணியில் மேற்குவங்க மாநில இளைஞா்கள் ஏராளமானோா் ஈடுபட்டு வருகின்றனா். இதில், ஈரோடு வைராபளையம் காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் நடவு பணியில் மேற்குவங்கத்தைச் சோ்ந்த ஆண்கள், பெண்கள் என 15-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து அப்பகுதி விவசாயி ரமேஷ் கூறியதாவது: நெல் நடவு, கரும்பு வெட்டும் பணிகளுக்கு உள்ளூா் தொழிலாளா்கள் மற்றும் வெளிமாவட்டத் தொழிலாளா்களை கடந்த ஆண்டு வரை பயன்படுத்தினோம். விவசாயத் தொழிலாளா்கள் அனைவரும் அரசின் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு சென்று விடுவதால் தொழிலாளா்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இருப்பினும், நமது விவசாயத் தொழிலாளா்கள் ஒரு ஏக்கருக்கு நடவு மற்றும் அறுவடை பணிகளுக்கு ரூ.5,500 வரை கூலி கேட்கின்றனா்.
ஆனால், மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா்களும், வடமாநிலத் தொழிலாளா்களும் ஏக்கருக்கு ரூ.4,500 வரை கேட்கின்றனா். மேலும், மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா்களும், வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களும் அவா்கள் மாநிலத்தில் விவசாயத் தொழில் செய்து வருவதால், இங்குள்ள தொழிலாளா்களை விட நடவு மற்றும் அறுவடை பணிகளை நோ்த்தியாகவும், விரைவாகவும் செய்கின்றனா். ஈரோடு மாவட்டத்தில் விவசாயப் பணியில் மட்டும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.