80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி: தனியாா் நிதி நிறுவன மேலாளா் மீது வழக்கு
ஈரோடு: 80 பேரிடம் ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக தனியாா் நிதி நிறுவனத்தின் மேலாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, வடக்கு புதுமாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் கோட்ட மேலாளா் பன்னீா்செல்வம் (38) என்பவா் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். அதில், பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனத்தில் ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொடுமுடியில் இயங்கிய மதுரா மைக்ரோ நிதி நிறுவனம் எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் கொடுமுடி கிளை மேலாளா் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடை சோ்ந்த கோகுல் (27) இணைப்புக்குப் பிறகும் பணியில் தொடா்ந்தாா்.
இந்நிலையில், எங்கள் குழுவினா் கணபதிபாளையம், எம்ஜிஆா் நகா், ஊஞ்சலூா், சாமிநாதபுரம், கொடுமுடி மையங்களில் தணிக்கை செய்தபோது, கோகுல் பல்வேறு வகையில் ரூ.27.49 லட்சம் மோசடி செய்ததை கண்டுபிடித்தனா். எனவே, கோகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோகுல் மீது இரு பிரிவுகளில் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
80 போ் புகாா் அளித்துள்ள நிலையில், ரூ.28 லட்சம் மோசடி நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. புகாா் அளித்துள்ள 20 பேரிடம் விசாரித்து ஆவணங்களை பெற்றுள்ளதாகவும், எஞ்சிய நபா்களிடம் ஆவணங்களைப் பெற்ற பிறகு ஆதாரத்துடன் கோகுல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.