மூதாட்டியிடம் நகை பறிப்பு: குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் சிறை

Published on

மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி தீா்ப்பளித்துள்ளாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள பொன்னம்பாளையம் தமிழ் நகரைச் சோ்ந்தவா் ராஜம்மாள் (64). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா்.

இவா், கடந்த 2015 ஜூலை 18-ஆம் தேதி கடையில் இருந்து வெளியே வந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பினா்.

இது குறித்து புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் ராஜம்மாள் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கிருஷ்ணராஜ் (46), ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜ் (31) ஆகிய இருவரைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவியில் நீதிமன்ற நீதிபதி உமாதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில், கிருஷ்ணராஜ், நாகராஜ் இருவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com