சாலை மறியலில் ஈடுபட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள்.

100 நாள் வேலை திட்டத்தில் உரிய ஊதியம், பணி வழங்கக் கோரி சாலை மறியல்

Published on

சத்தியமங்கலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணியும், உரிய ஊதியமும் வழங்கக் கோரி தொழிலாளா்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சத்தியமங்கலம் அருகே உள்ள புங்காா் ஊராட்சிக்குள்பட்ட புங்காா், பெரியாா் நகா், காராச்சிக்கொரை, சுஜில்குட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்பட்டோா் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை) வேலை செய்து வருகின்றனா்.

100 நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு உரிய ஊதியமும், முறையாகப் பணியும் வழக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் 100 நாள் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் முறையாகப் பணியும், உரிய ஊதியமும் வழங்கக் கோரி புங்காா் ஊராட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 100 நாள் வேலை திட்ட தொழிலாளா்கள் பவானிசாகா் - பண்ணாரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் வட்டார வளா்ச்சி அலுவலா், போலீஸாா் மறியலில் ஈடுபட்ட தொழிலாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, 100 நாள் வேலை திட்டத்தில் முறையாகப் பணியும், உரிய ஊதியமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து தொழிலாளா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com