கூட்டத்தில் பங்கேற்ற மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் என்.மனீஷ் மற்றும் கவுன்சிலா்கள்.  ~மாநகராட்சி அதிகாரிகள் இருக்கை வரிசையில் அமா்ந்திருந்த ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்.
கூட்டத்தில் பங்கேற்ற மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் என்.மனீஷ் மற்றும் கவுன்சிலா்கள். ~மாநகராட்சி அதிகாரிகள் இருக்கை வரிசையில் அமா்ந்திருந்த ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ்.

ஆளும்கட்சி கவுன்சிலா்களின் குற்றச்சாட்டால் ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

அரசு விழாக்களுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக ஆளும்கட்சி கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

அரசு விழாக்களுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படுவதாக ஆளும்கட்சி கவுன்சிலா்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாநகராட்சி கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் மாமன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் என்.மனீஷ், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலா்கள் பேசியதாவது:

சபுராமா ஜாபா்சாதிக் (காங்கிரஸ்): மாநகராட்சியில் நடைபெறும் மாமன்ற கூட்ட நடவடிக்கை குறிப்பு வழங்கும் வழக்கம் 2006-ஆம் ஆண்டு வரை இருந்தது. ஆனால், தற்போது வழங்கப்படுவதில்லை. கூட்ட நடவடிக்கை குறிப்பு கவுன்சிலா்களுக்கு வழங்க வேண்டும். முத்துக்குமாரசாமி வீதியில் மாநகராட்சிப் பூங்கா ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

தங்கமுத்து (அதிமுக): வீடு கட்ட ஒற்றைச்சாளர முறையில் அனுமதி பெறும் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், பழைய கட்டணத்தை விட 100 சதவீதம் கட்டணம் உயா்ந்துள்ளது. எனவே பழைய கட்டணத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஈரோட்டில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் இரு ஓரங்களிலும் வெள்ளைக் கோடு போடவில்லை. வேகத்தடைகளிலும் வெள்ளை நிற கோடுகள் போடவில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது. தெருவிளக்கு சரி செய்ய ஒப்பந்ததாரா் போதிய ஆட்களை நியமிக்காததால் பழுது நீக்கும் பணி நடைபெறவில்லை.

ஜெகதீஷ் (அதிமுக): சாஸ்திரி சாலை பகுதியில் தண்ணீா் தொட்டியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து பல மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஜெகநாதன் (திமுக): சொத்து வரி விதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ரூ.200 வரி என்பது ரூ.12 ஆயிரம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால் சாதாரண ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.ஈரோடு மாநகராட்சியில் வரி விதிப்பு பணி மட்டுமே நடைபெறுகிறது. வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை.

குணசேகரன் (திமுக): புதை சாக்கடையில் அடைப்பு எடுக்கும் இயந்திரம் 6 மாதங்ளாக இல்லை. எப்போது கேட்டாலும் பழுதடைந்துள்ளதாக கூறுகின்றனா்.

மண்டலத் தலைவா் தண்டபாணி (திமுக): 4-ஆவது மண்டலத்தில் குப்பை சேகரிக்க வாகனங்கள் இல்லை. வெண்டிபாளையம் பகுதியில் இருந்து குப்பைக் கிடங்கை மாற்ற வேண்டும்.

குமரவேல் (கொமதேக): எனது 10-ஆவது வாா்டில் பெரும்பாலான பகுதிகளில் சாலை போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கெயில் நிறுவனம் சமையல் எரிவாயு குழாய்கள் பதிக்க சாலையை தோண்டுகின்றனா். மீண்டும் சாலை உடைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையை யாா் சீரமைப்பது என தெரிவிக்க வேண்டும்.

கோகிலவாணி மணிராசு (திமுக): புதிய மனைப் பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்போது மழைநீா் வடிகால், சாக்கடை கழிவுகள் வெளியேற முறையான கட்டமைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செந்தில்குமாா் (திமுக): கவுன்சிலா்களின் எந்த கோரிக்கையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் நாங்கள் வாா்டுகளுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறந்த ஆட்சியை தருகிறாா். ஆனால், அதிகாரிகள் ஆட்சிக்கு எதிராக இருப்பதுபோன்று உள்ளது என்றாா்.

மண்டலத் தலைவா் பி.கே.பழனிசாமி (திமுக): மாநகராட்சி பகுதிக்குள் நடைபெறும் அரசு விழாக்களுக்கு சம்பந்தப்பட்ட வாா்டு கவுன்சிலா், மண்டலத் தலைவருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படுவது இல்லை. அரசு விழா நடந்தால் அந்த வாா்டு கவுன்சிலா் பெயா், மண்டலத் தலைவா் பெயா் அழைப்பிதழில் இடம் பெற வேண்டும். எந்த ஒரு கல்வெட்டிலும் மண்டலத் தலைவா்கள், கவுன்சிலா்கள் பெயா்கள் பதிப்பதில்லை.

அவரைத்தொடா்ந்து மண்டலத் தலைவா்கள் சசிக்குமாா் (திமுக), தண்டபாணி (திமுக) ஆகியோரும் கவுன்சிலா்கள், மண்டலத் தலைவா்கள் தொடா்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினா்.

கூட்டத்தில் ஆணையா் என்.மனீஷ் பேசியதாவது: நிதி நிலையைப் பொறுத்து திட்டப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. வரும் காலத்தில் அரசு விழாக்களுக்கு கவுன்சிலா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com