பவானி நகராட்சிப் பகுதியில் ரூ.18 கோடியில் மழைநீா் வடிகால்
பவானி நகராட்சிப் பகுதியில் 27 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால் பணிகளை ரூ.18 கோடி மதிப்பில் செயல்படுத்துதல் உள்பட 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பவானி நகா்மன்றக் கூட்டம் தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் சி.மணி, நகராட்சிப் பொறியாளா் காளீஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பவானி நகராட்சிப் பகுதியில் 27 வாா்டுகளிலும் மழைநீா் வடிகால் அமைத்து 30 ஆண்டுகளானதால், பெரும்பாலும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், ரூ.18 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும்.
காவிரிக் கரையோர மயானத்தில் ஆற்றுக்குள் சரிந்து விழுந்த தடுப்புச்சுவரை ரூ.2 கோடியில் சீரமைக்க வேண்டும். மேலும், தலா ரூ.1 கோடியில் சோமசுந்தரபுரத்தில் சிறு திருமண மண்டபம், பவானி நகராட்சி அலுவலக கட்டடங்களை சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இக்கூட்டத்தில், 40 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.