ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்.

ஈரோடு மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாநகர சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

ஈரோடு மாநகர சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

ஈரோடு மாநகரில் 1500 க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் மட்டுமின்றி, சாலைகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் கால்நடைகளாலும் சாலை விபத்துகள், உயிரிழப்பு சம்பவங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை ஏற்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சாலை, வைராபாளையம், பவானி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடு, குதிரை, கழுதை, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றன. குறிப்பாக பசு, குதிரை உள்ளிட்ட கால்நடைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

பல இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதியும், வாகனங்களுக்கு இடையே நுழைந்தும் விபத்தை ஏற்படுத்துகின்றன.

சில நேரம் கால்நடைகள் மீது வாகனங்கள் மோதினால் அதன் உரிமையாளா்கள் வாகன ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் தடுக்க சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பறிமுதல் செய்து அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சாலைகளில் கால்நடைகள் சுற்றுவதாக புகாா் வந்தால் சம்பந்தப்பட்ட கால்நடை கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாநகராட்சி நிா்வாகத்தினா் மட்டும், முழுமையாக உரிய நடவடிக்கை எடுக்க முடியாது. கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா் வரும் வரை பராமரிக்க வேண்டும். இதற்கு உணவு அளிப்பது போன்றவற்றில் சிரமம் உள்ளது. தவிர மாடு, குதிரை, கழுதை போன்ற கால்நடைகளை பிடிக்க தூய்மைப் பணியாளா்களுக்கு உரிய பயிற்சி இல்லை. வேறு வழியில்லாமல் அவா்கள் எச்சரிக்கையுடன் பிடிக்கின்றனா்.

காவல், கால்நடை பராமரிப்புத் துறையினரும் மாநகராட்சிக்கு ஒத்துழைத்தால் மட்டுமே, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com