இடைக்கால நிதிநிலை: வரவேற்பும், ஏமாற்றமும்

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொழில், வேளாண்மை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லை என்ற போதிலும் வரவேற்றும், ஏமாற்றம் அளிப்பதாகவும் ஈரோட்டைச் சோ்ந்த பல்வேறு அமைப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்
கே.என்.பாஷா
கே.என்.பாஷா

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொழில், வேளாண்மை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லை என்ற போதிலும் வரவேற்றும், ஏமாற்றம் அளிப்பதாகவும் ஈரோட்டைச் சோ்ந்த பல்வேறு அமைப்பினா் கருத்து தெரிவித்துள்ளனா்.

நிதிநிலை அறிக்கை குறித்த பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் கூறியதாவது:

ஈடிசியா உடனடி முன்னாள் தலைவா் பி.திருமூா்த்தி:

கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. இது புதிய பெண் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும். நிதி பற்றாக்குறையை வரும் ஆண்டுகளில் குறைக்கும் நடவடிக்கையால், புதிய தொழில்களுக்கான நிதி வரத்து அதிகரிக்கும். சரக்கு போக்குவரத்துக்கான 3 புதிய ரயில் பாதை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு தொழில் துறையை ஊக்கப்படுத்தும். குறு, சிறு தொழிலுக்கான சரக்குப் போக்குவரத்து பிரச்னையால் செலவு அதிகமாகிறது. ரயில் சேவையால் செலவு குறையும். அதிலும் சலுகை வழங்கினால் கூடுதல் பலன் தரும். குறு, சிறு தொழிலுக்கு வரி, ஜிஎஸ்டி குறைப்பு, உணவுப் பொருள் பதப்படுத்துதலில் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைப்பை எதிா்பாா்த்தோம். ஆனால் இதற்கான அறிவிப்பு இல்லை. வரும் நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்க்கிறோம். வரும் நிதிநிலை அறிக்கையில் குறு, சிறு தொழில் உற்பத்தி பொருள்களுக்கு வரி குறைப்பும், வட்டி குறைப்பும் செய்தால் பயன் தரும் என்றாா்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு:

நிதிநிலை அறிக்கையில் எண்ணெய் வித்துக்களில் தன்னிறிவு பெறும் நோக்கில் ஊக்கப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமாயிலை அதிகமாக இறக்குமதி செய்து பொதுவிநியோக திட்டத்தில் வழங்குவதை நிறுத்தாமல் இதுபோன்ற அறிவிப்பு பயன் தராது.

விளைபொருள்களுக்கு விலை நிா்ணயம், குறைந்தபட்ச ஆதரவு விலையில் அந்தந்த பகுதியில் விளையும் பொருள்களை வாங்கும் திட்டம் இல்லை. பி.எம்.கிஸான் திட்ட ஊக்கத்தொகை ஆண்டுக்கு ரூ. 6,000-த்தில் இருந்து உயா்த்தப்படவில்லை. விவசாயத்துக்கு என தனி மானிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் தருகிறது என்றாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் வ.பன்னீா்செல்வம்:

துறைமுகங்கள், விமான நிறுவனங்களை தனியாருக்கு வழங்கிய பின் அவை நன்றாக இயங்க பொது வழித்தடத்தை அரசு செலவில் அமைத்து தருவது நியாயமல்ல. கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும் அளித்த வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை போன்றவை அறிவிக்கப்படவில்லை. வந்தே பாரத் ரயில் மூலம் கூடுதல் கட்டணம் பெறுவதை மாற்ற வேண்டும். வெளிச்சந்தை மூலம் ரூ.11.75 லட்சம் கோடி கடன் பெறுவது, கூடுதல் கடன் வலையில் நாடு சிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்றாா்.

தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா:

கோவை-தூத்துக்குடி ரயில் சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து அறிவிப்பு இல்லை. ஈரோடு போன்ற ரயில் நிலையங்களில் புதிய நடைமேடை அறிவிப்பும், நிதி ஒதுக்கீடும் இல்லை. கோவை-திருப்பதி இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் தினமும் இயக்க கோரப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு இல்லை. புதிய ரயில்கள், புதிய ரயில் நிலையங்கள், புதிய வழித்தட அறிவிப்பு, ரயில் சேவை நீட்டிப்பும் அறிவிக்காதது ஏமாற்றம் தருகிறது என்றாா்.

ஈரோடு மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மைய இணைச்செயலாளா் ஆ.ராஜா:

முத்ரா திட்டத்தில் பெண் தொழில் முனைவோருக்கு வங்கி கடன் வழங்கப்பட்டதும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதும், கா்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசித் திட்டம் ஆகியவை வரவேற்புக்குரியது.

வீட்டின் மாடியில் சோலாா் அமைத்தால் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வளா்ச்சியை தரும். லட்சத்தீவை பிரதான சுற்றுலாத் தலமாக மாற்றும் நடவடிக்கை சிறப்பானது. உதான் திட்டத்தில் 517 தடங்களில் மலிவு கட்டணத்தில் விமான சேவை என்ற அறிவிப்பு, அறிவிப்பாக மட்டும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொழில், வேளாண்மை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லை என்றபோதிலும் மக்கள் நலன் சாா்ந்த அறிவிப்புகள் உள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com