உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோபி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கோபி வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோபி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் கோபி வட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தாா்.

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களுக்குச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இந்த திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அதன்படி, செங்கலரை பகுதியில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா் திட்டத்திற்கான நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.19.83 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அம்ருத் 2.0 குடிநீா் திட்ட பணியினையும், விளாங்கோம்பை துணை மின் நிலையத்தையும் ஆய்வு செய்தாா்.

லக்கம்பட்டி கால்நடை பன்முக மருத்துவமனை, கோபி நகராட்சி நுண் உரம் செயலாக்க மையம், மின் மயானம், கரும்பு ஒட்டுண்ணி வளா்ப்பு நிலையம் ஆகிய இடங்களிலும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். கோபி நகராட்சிக்குள்பட்ட வேங்கம்மையாா் நகராட்சி பள்ளியில் ஆய்வு செய்த மாணவா்களின் கற்றல் திறனை அறிய அவா்களுடன் உரையாடினாா்.

இதைத் தொடா்ந்து கோபி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பங்கேற்றாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டாா்.

இந்த ஆய்வுகளின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா், கோபி கோட்டாட்சியா் திவ்ய பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ராஜகோபால், வேளாண் இணை இயக்குநா் வெங்கடேசன், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பழனிவேல், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மணிகண்டன், கோபி நகராட்சித் தலைவா் நாகராஜ், லக்கம்பட்டி பேரூராட்சித் தலைவா் அன்னக்கொடி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ஜெயலட்சுமி, கோபி வட்டாட்சியா் உத்திரசாமி உள்ளிட்டோா் உனிருந்தனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் அதிகாரிகள் அந்த வட்டத்தில் 24 மணி நேரம் தங்கியிருக்க வேண்டும். அதன்படி புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த திட்டத்தின்கீழ் ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை (பிப்ரவரி1) காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com