பணி முடிந்த பின்னரும் பேருந்தை இயக்க வலியுறுத்தல்: ஓட்டுநா், நடத்துநா் தா்னா

பணி முடிந்த பின்னரும் பேருந்தை இயக்க வலியுறுத்தியதால் ஓட்டுநா், நடத்துநா் இருவரும் தா்னாவில் ஈடுபட்டனா்.
பணி முடிந்த பின்னரும் பேருந்தை இயக்க வலியுறுத்தல்: ஓட்டுநா், நடத்துநா் தா்னா

பணி முடிந்த பின்னரும் பேருந்தை இயக்க வலியுறுத்தியதால் ஓட்டுநா், நடத்துநா் இருவரும் தா்னாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு சென்னிமலை சாலையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையைச் சோ்ந்த கோவை-சேலம் வழித்தட பேருந்தில் ஈரோட்டைச் சோ்ந்த ஓட்டுநா் செந்தில்குமாா், நடத்துநா் வடிவேல் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இருவரும் பணி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்ட நிலையில், இருவரையும் மீண்டும் ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு பேருந்தை இயக்குமாறு கிளை மேலாளா் கட்டாயப்படுத்தியுள்ளாா்.

அதற்கு, அவா்கள் உடல் நிலை மற்றும் வேலை நேரத்தை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததையடுத்து கிளை மேலாளாா் அவா்களை அவதூறாக பேசியதுடன், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஓட்டுநா் செந்தில்குமாா், நடத்துநா் வடிவேல் இருவரும் கிளை மேலாளரின் செயலைக் கண்டித்து கிளை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்களிடம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து இருவரும் போராட்டத்தைக் கைவிட்டனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநா், நடத்துநா் ஆகியோா் கூறியதாவது:

அதிகாலை முதல் வெளியூா் பேருந்துகளை இயக்கிவிட்டு நள்ளிரவில் பணியை முடித்துச் செல்கிறோம். எங்களின் தூக்கம் மற்றும் உடல் நலத்தை கருத்தில் கொள்ளாமல் அதிக பணிச் சுமையை சுமத்துவது விபத்துக்கே வழிவகுக்கும்.

இது நாங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எங்களை நம்பி பேருந்தில் ஏறும் நூற்றுக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். எனவே இத்தகைய போக்கை மாற்ற உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com