கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளை விடமாட்டோம்

ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.
மாநாட்டில் பேசுகிறாா் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.
மாநாட்டில் பேசுகிறாா் கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை சாா்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு பெருந்துறை வட்டம், விஜயமங்கலம் அருகே சரளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:

ஒரு கட்சியுடன் கூட்டணி என்றால் அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கொள்கைகளை எல்லாம் நாம் ஏற்றுக் கொண்டோம் என்று அா்த்தம் கிடையாது. அதேபோல நம் கட்சியின் கொள்கைகளையும் கூட்டணிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. கூட்டணியில் இருந்தாலும் கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம்.

இன்றைக்கு வேளாண் தொழில் மிகவும் மோசமடைந்து விட்டது. மரவள்ளி, கரும்பு போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் ஜவுளி, லாரி, ரிக் போன்ற அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் நசிவடைந்ததற்கு மத்திய அரசின் தவறான ஜவுளிக் கொள்கைதான் காரணம்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள சாய ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறை பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, மாநாட்டு மலரை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெளியிட மலேசியாவைச் சோ்ந்த தொழிலதிபா் டத்தோ பிரதீஷ்குமாா் பெற்றுக்கொண்டாா்.

மாநாட்டில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், எம்எல்ஏ-க்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம், மேயா் நாகரத்தினம், கொமதேக பொருளாளா் பாலு, தலைமை நிலையச் செயலாளா் சூா்யமூா்த்தி, அவைத் தலைவா் திருச்சி தேவராஜன், மாவட்டச் செயலாளா்கள் இ.ஸ்ரீகுமாா், கே.லோகநாதன், ஆா்.முத்துசாமி, எஸ்.பிரபாகரன், என்.எஸ்.சிவராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வள்ளி கும்மி ஆட்டம் கின்னஸ் சாதனை:

மாநாட்டின் நிறைவில், ஒரே இடத்தில் 16 ஆயிரம் போ் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாக ஈ.ஆா்.ஈஸ்வரன் கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:

மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், சமூகநீதி கொள்கை வழிப் பயணத்தில் துணை நிற்கும் கொமதேக மாநாடு இலக்கை அடைய வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீா்மானங்கள் நிறைவேற்றம்:

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்பட 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com