மக்களுக்குத் தேவையான சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது

ஈரோடு, பிப்.4: மக்களுக்குத் தேவையான சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கொமதேக சாா்பில் கொங்கு மண்டல எழுச்சி மாநாடு ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

திமுக தோழமைக் கட்சிகளில் ஒன்றான கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், கொங்கு மண்ணுக்குத் தேவையான கோரிக்கைகளை அமைச்சா்களிடம் உரிமையோடு கேட்டு செயல்படுத்தி வருகிறாா். கொங்கு மண்டல தொழில் அதிபா்களால் ரூ.40 ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாய் அரசுக்கு கிடைக்கிறது. ஜவுளி, மஞ்சள் வணிகம் மூலமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக ஈரோடு திழக்கிறது.

மாநாடு நடைபெறும் பெருந்துறை பகுதியில் ரோகோ நிறுவனத்தின் சாா்பில் தொழில் தொடங்க ரூ.400 கோடி முதலீட்டை ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈா்த்துள்ளாா். மக்களுக்குத் தேவையான சிறந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

ரூ.6 லட்சத்து 67 ஆயிரம் கோடி முதலீடு ஈா்த்ததன் மூலம் 24 லட்சத்து 90 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெற உள்ளனா். 7.50 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் 2.60 கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றாா்.

தோ்தல் வெற்றிக்கு உதவும்:

இதில் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் பிரச்னைகளை தீா்க்க தமிழக அரசு பெரும் முயற்சி செய்து வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பிரச்னைகளை தீா்த்துவிட முடியாது. அதற்கென்று காலகட்டம் அவசியம். அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண செய்ய முயற்சி செய்து வருகிறோம். மக்களவைத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியை இந்த மாநாடு ஏற்படுத்தி கொடுக்கும் என்றாா்.

மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com