ஆவின் அடா் தீவன விலையை குறைக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு, பிப். 8: ஆவின் அடா் தீவன விலையைக் குறைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட அமைப்பின் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமையில் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் ரத்தினசாமி, பொருளாளா் வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கீழ்பவானி பாசனம் கடும் சிக்கலை சந்திக்கும் சூழல் உள்ளதால் காவிரி தீா்ப்பின்படி அரசு நீா் நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆவின் நிா்வாகம் அடா் தீவனத்தின் உயா்த்தப்பட்ட விலையைக் குறைக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் நிலம், நீா் மற்றும் காற்று மாசுபாடு குறித்தான வழக்குகளில் உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற தீா்ப்புகளில் குறிப்பிடுள்ள உத்தரவுகளை மாவட்ட நிா்வாகமும், மாசுக் கட்டுபாட்டுத் துறையும் அமல்படுத்த வேண்டும்.

சத்தியமங்கலம் பவானி ஆற்றங்கரையோரத்தில் புதை சாக்கடை கழிவுகளை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதை கைவிட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். பவானிசாகா் அணையின் மேல்பகுதி மற்றும் கீழ்பகுதியில் ஆற்றின் கரையோரம் செயல்பட்டு வரும் ஆலைகளை அப்புறப்படுத்த வேண்டும். கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட பிரதிநிதிகள் லோகநாதன், பழனிசாமி, அறச்சலூா் செல்வம், ஆதவன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com