எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்தியஅரசால் வஞ்சிக்கப்படுகின்றன: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்தியஅரசால் வஞ்சிக்கப்படுகின்றன: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

ஈரோடு, பிப்.8: எதிா்கட்சிகள் ஆளும் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகின்றன என்று முன்னாள் மத்திய அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ஆா்.ரகுராமன் தலைமை வகித்தாா். இதில், இந்தியா கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பேசினா்.

இதைத் தொடா்ந்து, ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ பேசியதாவது: எதிா்கட்சிகள் ஆளும் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்கள் மத்திய அரசால் மிகவும் வஞ்சிக்கப்படுகின்றன. பாஜகவுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு மிக அதிகமாக நிதி வழங்கப்படுகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிடும்.

இதனால் இந்தியா கூட்டணி கட்சிகள் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையை கவலைப்படாமல் மத்திய பாஜக ஆட்சியை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் டி.திருச்செல்வம், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஈ.பி.ரவி, ஈ.ஆா்.ராஜேந்திரன், துணைத் தலைவா் பா.ராஜேஷ்ரோஜப்பா, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com