நீா்நிலைகளில் அரிய வகை கருப்பு நாரைகள்: பாதுகாக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் கருப்பு நிற நாரைகள் தற்போது ஈரோடு மாவட்டத்தில் விளைநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அழிந்துவரும் பறவைகள் பட்டியலில்
erd11nara_1102chn_124_3
erd11nara_1102chn_124_3

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் கருப்பு நிற நாரைகள் தற்போது ஈரோடு மாவட்டத்தில் விளைநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் உள்ள இந்த நாரைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் வனப் பகுதி உள்ளது. இதில் பல்வேறு வகையான தாவர இனங்களும், பாலூட்டிகளும், பறவை இனங்களும், வண்ணத்துப்பூச்சி இனங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக இந்த மாவட்டத்தின் நீா்நிலைகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வது வழக்கம். கடந்த மாதம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீா் நிலைகளில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன் மூலமாக எத்தகைய பறவை இனங்கள் உள்ளன என்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல நீா்நிலைகள் மற்றும் சுற்றுவட்டார விளைநிலப் பகுதிகளில், தற்போது அரிதான கருப்பு நாரைகள் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது. வழக்கமாக விளைநிலங்களில் கொக்குகள், வெள்ளை நிற நாரைகள் இருப்பதைப் பாா்த்த விவசாயிகள், தற்போது முழுவதும் கருப்பு நிற நாரைகள் இருப்பதைக் கண்டு ரசிக்கின்றனா். இவை பாா்ப்பதற்கு முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் அந்த வழியே செல்லும் பொதுமக்களும் இவற்றை ஆா்வத்துடன் கண்டு செல்கின்றனா்.

இந்த வகை நாரைகள் கடந்த சில ஆண்டுகளாகவே மழைக்காலம் முடிந்ததும் அதிக அளவில் தென்படுவதாகக் கூறப்படுகிறது. நடவுக்காக உழவு செய்த நிலத்தில் வெள்ளை நாரையுடன் சோ்ந்து கருப்பு நாரைகளும், கூட்டமாக இணைந்து புழு பூச்சிகளை உண்கின்றன.

இதுகுறித்து ஈரோடு வைராபாளையத்தை சோ்ந்த விவசாயி அருள்முருகன் கூறியதாவது: கருப்பு நிற நாரைகள் கடந்த ஆண்டு முதல்தான் இங்கு வருகின்றன. இந்த வகை நாரைகள் ஒவ்வொரு ஆண்டும் சீசன் காலங்களில் இடத்துக்கு இடம் மாறி தங்களுக்கான சிறந்த சூழலை ஏற்படுத்தி இனப்பெருக்கம் செய்யும் என வனத் துறையினா் கூறுகின்றனா். அழிந்து வரும் பட்டியலில் இருக்கும் கருப்பு நிற நாரை வகைகளை பாதுகாக்க வேண்டும். வயல்களில் உள்ள இந்த நாரைகளை வேட்டையாட விவசாயிகள் அனுமதிக்கக்கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com