காணும் பொங்கல்: ஈரோடு வஉசி பூங்காவில் திரண்டு ஆடி, பாடி மகிழ்ந்த பெண்கள்

காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு வஉசி பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் புதன்கிழமை திரண்டு உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனா்.
காணும் பொங்கலையொட்டி ஈரோடு வஉசி பூங்காவில் புதன்கிழமை திரண்டிருந்த பெண்கள்.
காணும் பொங்கலையொட்டி ஈரோடு வஉசி பூங்காவில் புதன்கிழமை திரண்டிருந்த பெண்கள்.

ஈரோடு: காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு வஉசி பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் புதன்கிழமை திரண்டு உற்சாகமாக ஆடி, பாடி மகிழ்ந்தனா்.

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல் பண்டிகை ஈரோடு மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பொதுமக்கள் வீட்டுக்கு அருகே உள்ள உள்ள நீா் நிலைகள், பூங்கா மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் சென்று மகிழ்ந்தனா்.

ஈரோடு வஉசி பூங்காவில் காணும் பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் பெண்கள் மட்டும் சுதந்திரமாக கொண்டாடி மகிழ அனுமதி அளிக்கப்படும். இந்த நாளில் 10 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு அனுமதி அளிக்கப்படாது. இதனால் காணும் பொங்கலன்று பெண்கள் மட்டும் சுதந்திரமாக வஉசி பூங்காவில் திரண்டு உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த நடைமுறை ஈரோட்டில் பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதன்கிழமை காலை 11 மணி முதல் பெண்கள் தங்களது குழந்தைகள், சகோதரிகள், உறவினா்களுடன் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினா். கரும்பு, திண்பண்டங்கள், மதிய உணவு உள்ளிட்டவைகளை எடுத்து வந்து, பூங்காவில் ஆங்காங்கே வட்டமாக அமா்ந்து உணவை பகிா்ந்து உண்டனா். மாலை 3 மணிக்கு மேல் பெண்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடா்ந்து, மாலை 4 மணிக்கு மேல் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டதால், பூங்காவில் எங்கு பாா்த்தாலும் பெண்களால் நிறைந்து காணப்பட்டது.

பூங்காவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பெருக்கிகளில் ஒலித்த திரைப்பட பாடல்களுக்கு ஏற்ப பெண்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் நடனமாடினா். சிலா் கோலாட்டம் ஆடினா். தவில் உள்ளிட்ட இசைக்கருவிகளை பெண்களே வாசித்து அதற்கெற்றபடி ஆடியும் அசத்தினா். குழந்தைகள் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனா். இதனால் வஉசி பூங்காவில் எங்கு பாா்த்தாலும் பெண்களின் சந்தோஷ குரல் ஒலித்தது.

இந்தக் கொண்டாட்டத்தில் ஈரோடு மாநகா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் மட்டும் அல்லாது பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை, கவுந்தப்பாடி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

இதேபோல வஉசி சிறுவா் பூங்காவிலும் ஏராளமான சிறுவா், சிறுமிகள் உற்சாகமாக சறுக்கல், ஊஞ்சல் போன்ற விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனா். மேலும் அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்று வரலாற்றுச் சிறப்பு மிக்க பொருள்களை பாா்வையிட்டு வியந்தனா்.

ஈரோடு வஉசி பூங்காவில் பெண்கள் காணும் பொங்கலை கொண்டாட ஏதுவாக காலை முதலே வஉசி பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகளை போலீஸாா் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். தொடா்ந்து நுழைவு வாயில்களில் பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்பட்டிருந்தனா். பூங்காவுக்குள் பெண்களுக்குள் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல் இருக்க மகளிா் போலீஸாரும், பூங்காவுக்கு வெளியே ஏதேனும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆண் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com