ஈரோடு ரயில் நிலைய கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபா் மீட்பு

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி உயர கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளியை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் 80 அடி உயர கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பழங்குற்றவாளியை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டனா்.

ஈரோடு ரயில் நிலையத்தில் பயண முன்பதிவு அலுவலகம் அருகில் 80 அடி உயர கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஏறிய 40 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் தற்கொலை செய்து கொள்ளப் போவவதாக கூறியுள்ளாா். இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள் ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கும், ஈரோடு ரயில்வே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி சுமாா் 60 அடி உயரத்தில் தடுப்புப் பலகையில் படுத்திருந்த அந்த நபரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். சுமாா் 30 நிமிடம் போராடி அவரை சமதானம் செய்து கீழே இறக்கி, ஈரோடு ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அந்த நபா், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ரயில்வே நிலைய பகுதியைச் சோ்ந்த செல்வன் (42) என்பதும், ஈரோடு தெற்கு போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் திருட்டு போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பழங்குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

தொடா் விசாரணையில், சூரம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு வழக்கு குறித்தும், கூட்டாளிகள் குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் மதுபோதையில் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து ஈரோடு ரயில்வே போலீஸாா், செல்வனை காவல் நிலையம் அழைத்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com