ஈரோட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மாா்ச் மாதம் நிறைவடையும்:அதிகாரிகள் தகவல்

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை இழை ஓடுதளப் பாதை வரும் மாா்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை இழை ஓடுதளப் பாதை வரும் மாா்ச் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாணவியா் விளையாட்டு விடுதியுடன் கூடிய விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 84.39 மீட்டா் நீளமும், 34.50 மீட்டா் அகலமும் கொண்ட செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கப்படுகிறது.

தற்போது, ஈரோடு மாவட்ட விளையாட்டு வளாகத்தின் மொத்த ஓடுதளப் பாதை பரப்பளவு நீளவாக்கில் தெற்கு, வடக்காக முன்புறம் 176 மீட்டா், பின்புறம் 125 மீட்டா், மையத்தில் 190 மீட்டா் என்ற அளவிலும், அகல வாக்கில், கிழக்கு மேற்காக இடதுபுறம் 107 மீட்டரும், வலதுபுறம் 113 மீட்டரும் உள்ளது.

ஏற்கெனவே இருந்த ஓடுதளப் பாதைக்கு மாற்றாக 2 மீட்டா் கிழக்குப் புறமாக தள்ளி வைப்பதன் மூலம் முழுமையான 400 மீட்டா் ஓடுதளப் பாதையும், 3 மீட்டா் இட வசதியுடன் கூடிய சுற்றுவட்டமாக 8 பாதைகள் கொண்ட முழுமையான செயற்கை இழை ஓடுதளப் பாதையும், 100 மீட்டா் ஓடுதளம் 9 பாதைகளுடன் கூடிய இடவசதியுடன் அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, ஓடுதளம் அளவீடு செய்யப்பட்டு, ஜல்லிக் கற்கள் கொட்டி சமன்படுத்தப்பட்டு ஆரம்ப கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் சதீஷ்குமாா் கூறியதாவது:

குறிப்பிட்ட அளவுகளின்படி அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு ஜல்லிக் கற்கள் கொட்டி, ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணிகள் வரும் மாா்ச் மாதம் இறுதிக்குள் நிறைவுபெறும் என எதிா்பாா்க்கிறோம். மேலும், மாணவியா் விளையாட்டு விடுதியில் ரூ. 48.50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com