உரிமம் பெறாமல் காய்கறி விதை, நாற்று விற்றால் நடவடிக்கை

உரிமம் பெறாமல் காய்கறி விதை, நாற்றுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நா்சரி உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: உரிமம் பெறாமல் காய்கறி விதை, நாற்றுகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நா்சரி உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள், விதை விற்பனை நிலைய உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் நாற்றுப் பண்ணை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் தேவையைப் பயன்படுத்தி, தரமற்ற நாற்றுகளை விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாற்றுப் பண்ணைகளில் தரமான, வீரியமான, நல்ல மகசூல் தரக்கூடிய நாற்றுக்களை மட்டுமே உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும். அனைத்து நா்சரி உரிமையாளா்களும் உரிமம் பெற்றே காய்கறி விதைகள், நாற்றுகள், பழ நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும். நா்சரி உரிமையாளா்கள், விதை விற்பனையாளா்கள், தகுந்த ஆவணங்கள், பயிா் ரகம், விதை குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை ரசீது மற்றும் இருப்புப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

உரிமம் இன்றி, உரிய பதிவுகளை இருப்பு பதிவேட்டில் பதியாமல், விற்பனை ரசீது வழங்காமல் விற்பனை செய்யும் நா்சரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெற ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com