தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

ஈரோடு: திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.

ஈரோடு மக்களவைத் தொகுதி பாஜக மகளிா் பிரதிநிதிகள் மாநாடு, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தல் பணிகள் வேகமெடுக்கும் நிலையில் பாஜகவின் கொள்கைகளையும், பிரதமா் மோடி அரசின் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு இந்த மாநாடு தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இருந்து மகளிா் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனா்.

பெண்களின் முன்னேற்றத்தை கவனத்தில் வைத்து திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா். தமிழகத்தில் மாத்திய அரசின் திட்டங்கள் எது, மாநில அரசின் திட்டங்கள் எது என்பது குறித்து மக்களுக்கு புரிதல் இல்லை. பல இடங்களில் மத்திய அரசு அதிக நிதி கொடுக்கும் திட்டங்களில் பிரதமரின் பெயரோ மத்திய அரசின் பெயரோ பயன்படுத்தப்படுவதில்லை.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அயோத்தி ராமா் கோயில் பிரதிஷடையை காண கோயில்களில் பக்தா்கள் ஏற்பாடு செய்ததை தமிழக அரசு அச்சுறுத்தியும், தொல்லைகள் கொடுத்தும் ரத்து செய்தது. இருப்பினும் கூட லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி வழிபாடு செய்து நேரலையில் கண்டு களித்துள்ளனா்.

மகளிா் வாயிலாக திராவிட மாடல் ஆட்சிக்கு பாஜக முடிவு கட்டும். ஹிந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பாா்கள்.

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வதந்தி பரப்புவதாக முதல்வா் கூறியுள்ளாா். கோயில்களில் விழா நடத்த அனுமதி இல்லை என காவல் துறையினா் கடிதம் கொடுத்துள்ளனா். முதல்வா் கவனத்துக்கு தெரியாமல் இந்தக் கடிதம் கொடுக்கப்பட்டதா, காவல் துறை முதல்வா் கட்டுப்பாட்டில் இல்லையா. இதுபோல நிகழ்வு சிறுபான்மை மதத்தில் நடக்குமானால் அதற்கு தடை விதிக்கும் தைரியம் தமிழக அரசுக்கு இருக்குமா. ஹிந்து மதத்தை திமுக தொடா்ந்து கொச்சைபடுத்தி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் பட்டியல் இனத்தவா்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆனால், இதுபோன்ற பிரச்னைகளில் திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் கேள்வி எழுப்புவதில்லை.

மக்களவைத் தோ்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகுதிகளில் பெண்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கும் சூழல் உள்ளது. தற்போது, கூட்டணி குறித்து பேச முடியாது. தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து கொண்டிருக்கிறது. கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு எடுக்கும்.

சேலம் திமுக மாநாட்டில் இருக்கைகள் போடப்பட்டதற்காக கின்னஸ் சாதனை கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com