ஈரோடு வனக் கோட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனக் கோட்டங்களிலும், ஈர நிலப்பரப்பிலும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.
erd27vana_2701chn_124_3
erd27vana_2701chn_124_3

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனக் கோட்டங்களிலும், ஈர நிலப்பரப்பிலும் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கியது.

இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சத்தியமங்கலம், ஆசனூா் என 3 வனக் கோட்டங்கள் உள்ளன. இங்கு 19 ஈர நிலப்பரப்பு இடங்கள் உள்ளன.

இதில் ஈரோடு வனக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதியில் ஈரோடு, அந்தியூா், பா்கூா், சென்னம்பட்டி, தட்டக்கரை என 5 வனச் சரகங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஈர நிலப்பரப்பான வெள்ளோடு பறவைகள் சரணாலய பகுதி, குளம், ஏரி உள்ளிட்ட இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஈரோடு வனக் கோட்ட மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு தலைமையில் வனத் துறையினா், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள், பறவைகள் ஆா்வலா்கள் மற்றும் நிபுணா்கள் என 140 போ் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனா். கண்ணில் தெரியும் பறவைகள், அவற்றின் இனங்கள், சப்தம் மற்றும் மொத்தமாக உள்ள பகுதிகளை வைத்து அவற்றை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

வெள்ளோடு சரணாலயம், கனகபுரம் ஏரி போன்ற இடங்களில் நிரந்தரமாக காணப்படும் பாம்புதாரா, சிறிய மற்றும் பெரிய நீா் காகம் உள்ளிட்ட பறவைகள், பிற இடங்களில் இருந்து வந்து செல்லும் நெருங்கால் உள்ளான், ஊசிவால் வாத்து போன்ற ஏராளமான பறவைகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இப்பணிகள் 2 நாளில் நிறைவடையும். இதன் மூலம் பறவைகளின் வருகை, அவை வாழ்வதற்கான சூழல் எவ்வாறு அமைந்துள்ளது, புதிதாக வரும் பறவைகள், அரியவகை பறவைகள் போன்றவற்றை கண்டறிய முடிகிறது என்றனா்.

Image Caption

வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறை ஊழியா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com