ஈரோட்டில் இரவு நேர மின்வெட்டால் மக்கள் அவதி

ஈரோடு, ஜூலை 3: ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் இரவு நேரங்களில் மின் வெட்டு ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சவிதா சாலை சந்திப்பு வரையிலான நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள், அலுவலகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஓராண்டாகவே இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. வாரத்தில் ஒரு நாளாவது இரவு நேரத்தில் 1 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள வணிகா்கள், 10-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.

இப்பகுதியில் மின்தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் மின்மாற்றி அமைப்பது போன்ற கட்டமைப்பை உருவாக்காதுதான் மின்வெட்டுக்கு காரணம் என வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து நாச்சியப்பா வீதியில் உணவகம் வைத்துள்ள சீனிவாசன் கூறியதாவது: ஈரோடு பேருந்து நிலையத்தின் தென் பகுதியான நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி, வாசுகி வீதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கடந்த 1- ஆம் தேதி இரவு 11.30 மணி முதல் 12.30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுபோல் புதன்கிழமை இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் இரவு 9 மணிக்கு பிறகும் வரவில்லை. ஓராண்டுக்கும் மேலாக இதுபோன்ற இரவு நேர தொடா் மின் தடையால் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருன்றனா். இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வுகாண மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு நகரில் தினமும் இரவு மின்சாரத்தின் தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மின்சாரம் விநியோகிக்க உதவும் பீடா் இயந்திரம் சீராக செயல்பட முடியாமல் திணறுகிறது. இருப்பினும் மக்கள் நலன் கருதி மாற்று ஏற்பாடுகள் செய்து இரவில் சீரான மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com