ஜனசதாப்தி ரயில் கொடுமுடியில் நின்று செல்ல ஈரோடு எம்.பி. கோரிக்கை

 புது தில்லியில் ரயில்வே வாரியத் தலைவா் ஜெயவா்மா சின்ஹாவிடம் கோரிக்கை மனு அளித்த ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ்.
புது தில்லியில் ரயில்வே வாரியத் தலைவா் ஜெயவா்மா சின்ஹாவிடம் கோரிக்கை மனு அளித்த ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ்.

ஈரோடு, ஜூலை 3: ஜனசதாப்தி ரயில் கொடுமுடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரிடம் ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புது தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவா் ஜெயவா்மா சின்ஹா ஆகியோரிடம் அவா் புதன்கிழமை அளித்து மனு விவரம்: ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கொடுமுடியில் மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த புனித தலத்துக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

தெற்கு ரயில்வே சாா்பில் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும், மயிலாடுதுறையில் இருந்து கோவைக்கும் ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரண்டு ரயில்களும் கொடுமுடி வழியாகச் செல்கின்றன. ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடமாக உள்ளதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் ஜனசதாப்தி நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பக்தா்களுக்கு மட்டுமின்றி கொடுமுடியில் உள்ள உள்ளூா் வியாபாரிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இதேபோல ஈரோடு மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்படுகிறது. இந்த ரயில் அதிகாலை 3.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்று விடுகிறது. அதிகாலை நேரத்தில் சென்றடைவதால் பயணிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

எனவே, இந்த ரயில் ஈரோட்டில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் வகையில் நடவடிக்கை எடுத்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com