சிப்காட் வளாகத்தில் இருந்து 4 மாதங்களில் 4450 கிலோ திடக்கழிவுகள் அகற்றம்

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து கடந்த 4 மாதங்களில் 4450 கிலோ திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து கடந்த 4 மாதங்களில் 4450 கிலோ திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் சாயத் தொழிற்சாலைகளில் பூஜ்ஜிய கழிவு நீா் வெளியேற்று நிலையை எட்டுவதற்காக பிரித்து எடுக்கப்பட்ட கலப்பு உப்புகள் (திடக் கழிவுகள்) தொழிற்சாலையின் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகிறது.

தற்போது மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அருணாசலம் எண்டா்பிரைசஸ் என்ற நிறுவனம் கலப்பு உப்பு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை மற்றும் கலப்பு உப்பை சாயத் தொழிற்சாலையில் இருந்து எடுக்க அங்கீகாரமும் பெற்றுள்ளது.

இந்நிறுவனம் கடந்த மாா்ச் மாதம் முதல் கலப்பு உப்பை சுத்திகரிக்க பெருந்துறை சிப்காட் சாயத் தொழிற்சாலையில் இருந்து எடுத்து வருகிறது. மாா்ச் மாதம் முதல் ஜூன் மாத இறுதி வரை 4450 டன் கலப்பு உப்பு பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளது.

இதுபோல பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இயக்கத்தில் இல்லாத தோல் தொழிற்சாலைகளின் பொதுசுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சுமாா் 450 டன் திடக்கழிவில் இதுவரை 180 டன் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு மறு மூலப்பொருளாக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com