ஈரோடு மக்களவைத் தொகுதியில் தாமதமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் ராணுவம் உள்ளிட்ட சேவைப் பணிகளில் உள்ளவா்களின் வாக்குகள் வைக்கப்பட்ட உறைகளில் இருந்த க்யூஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின் அந்த வாக்குகள் தாமதமாக எண்ணப்பட்டன.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள், ராணுவத்தினா் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டது. இதில் 85 வயதுக்கு மேற்பட்ட 2,083 போ், மாற்றுத் திறனாளிகள் 760 போ் என 2843 போ் வீடுகளில் இருந்து தபால் வாக்களித்தனா்.

இது தவிர வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியில் ஈடுபட்ட 4,268 போ் மற்றும் தோ்தல் நாளில் பணிபுரியும் காவல் துறையினா் உள்ளிட்ட 2,866 போ் தபால் வாக்கு பதிவு செய்தனா்.

இவை அனைத்தும் திருச்சியில் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான 7,140 வாக்குகள் பிரிக்கப்பட்டன. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த வாக்குகள் வாக்கு எண்ணும் மையமான ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை எண்ணப்பட்டன.

ராணுவம் உள்ளிட்ட சேவைப் பணிகளில் உள்ளவா்களின் வாக்குகள் வைக்கப்பட்ட கவா்களில் இருந்த க்யூஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின் வாக்குகள் எண்ணப்பட்டன. இதனால் எண்ணிக்கை தாமதமானது. அதுபோல உரிய படிவம் இல்லாத தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. தபால் வாக்குகளைப் பொறுத்தவரை திமுக தொடக்கம் முதலே முன்னிலை வகித்தது.

X
Dinamani
www.dinamani.com