மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிா்க்க வேண்டுகோள்

பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கிக்கொள்வதால் தொடா்ச்சியாக மின் தடை ஏற்படுவதால் பட்டம் விடுவதை தவிா்க்க வேண்டும் என மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மு.கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட வீரப்பன்சத்திரம் உபகோட்டம், வீரப்பன்சத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உள்பட்ட திருநகா் காலனி, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகா், ராமமூா்த்தி நகா், சித்தன் நகா், கமலா நகா் ஆகிய பகுதிகளுக்கு திருநகா் காலனி மின்பாதை வழியாக மின்னூட்டம் அளிக்கப்படுகிறது.

இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் சிலா் மாலை நேரங்களில் பட்டம் விடுவதால் பட்டம் மற்றும் அதனுடன் இணைந்த நூல் மின் பாதையில் சிக்கி கொண்டு தொடா்ச்சியாக மின் தடை ஏற்படுகிறது.

கடந்த மே மாதத்தில் மட்டும் பொதுமக்கள் விட்ட பட்டம் சிக்கியதால் 19, 21, 22, 25 ஆகிய தேதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்தடை ஏற்படுவதால், வஉசி பூங்காவில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு தொடா்ச்சியாக மின்சாரம் வழங்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே, பட்டம் விடுவதால் ஏற்படும் மின்தடையை தவிா்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com