கோபி நகராட்சி வாகனத்தை சிறைபிடித்த விவசாயிகள்.
கோபி நகராட்சி வாகனத்தை சிறைபிடித்த விவசாயிகள்.

வாய்க்கால் கரையில் குப்பை கொட்டிய நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த தடப்பள்ளி வாய்க்கால் கரையில் பிளாஸ்டிக் கழிகளை கொட்ட வந்த கோபி நகராட்சிக்குச் சொந்தமான வாகனத்தை விவசாயிகள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

தடப்பள்ளி வாய்க்கால் கரையில் பிளாஸ்டிக் கழிகளை கொட்ட வந்த கோபி நகராட்சிக்குச் சொந்தமான வாகனத்தை அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்து கோபி நகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகளிடம், வாய்க்கால் கரையில் குப்பைகளை கொட்டுவது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து வாகன ஓட்டுநரிடம் நகராட்சி அதிகாரிகள் விசாரணை செய்தனா். அதில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தனியாா் நிறுவனத்தில் இருந்து குப்பைகளை வாங்கி கோபியில் உள்ள குப்பை கிடங்குக்கு கொண்டு செல்வதாக தெரிவித்து அங்கு இருந்த குப்பைகளை வாய்க்கால் கரையில் கொட்டியதாக ஓட்டுநா் தெரிவித்தாா்.

இதையடுத்து கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. மேலும், நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், தன்னிச்சையாக செயல்பட்டு குப்பைகளை வாய்க்கால் கரையில் கொட்டிய வாகன ஓட்டுநா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com