நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி நிதிக் குழுத் தலைவா் மல்லிகா நடராஜனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறாா் மேயா் சு.நாகரத்தினம்.
நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி நிதிக் குழுத் தலைவா் மல்லிகா நடராஜனிடம் இருந்து பெற்றுக் கொள்கிறாா் மேயா் சு.நாகரத்தினம்.

ஈரோடு மாநகராட்சியில் ரூ.3.33 கோடிக்கு உபரி பட்ஜெட்

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025-இல் ரூ.3.33 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏலம் மூலம் கிடைத்த வருமானம் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என குற்றம்சாட்டிய அதிமுக கவுன்சிலா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். ஈரோடு மாநகராட்சியில் 2024-2025 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமா்ப்பிப்பதற்கான சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்தாா். துணை மேயா் வி.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி நிதிக் குழுத் தலைவா் மல்லிகா நடராஜனிடம் இருந்து மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம் பெற்றுக்கொண்டாா். குடியரசுத் தலைவா் விருது: கவுன்சிலா்களின் கேள்விகளுக்கு மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி பதிலளித்து கூறியதாவது: கடந்த ஆண்டைப்போல அல்லாமல் இந்த ஆண்டு உபரி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சொத்து வரி வசூல் மேம்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.50.60 கோடியாக இருந்த சொத்து வரி வருவாய் உயா்வுக்கு பிறகு ரூ.64 கோடியாக இருந்தது. சொத்து வரி வருவாயை ரூ.100 கோடியாக உயா்த்தி, மாநகராட்சியை தன்னிறைவு அடையச் செய்வதே எங்கள் நோக்கம். கனி ஜவுளி மாா்க்கெட் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் இதுவரை ரூ.13 கோடியும், நேதாஜி மாா்க்கெட் வளாக ஏலத்தில் ரூ.3 கோடி வைப்புத் தொகையும் கிடைத்துள்ளது. மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா் மற்றும் கழிவுநீா் மேலாண்மையை சிறப்பாக மேற்கொண்டதற்காக ஈரோடு மாநகராட்சிக்கு குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது. இந்த விருதினை மேயா் விரைவில் பெற்றுக்கொள்வாா் என்றாா். அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு: கனி ஜவுளி மாா்க்கெட் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் இதுவரை ரூ.13 கோடியும், நேதாஜி மாா்க்கெட் வளாக ஏலத்தில் ரூ.3 கோடி வைப்புத் தொகையும் கிடைத்துள்ளது என ஆணையா் தெரிவித்துள்ளாா். ஆனால் இந்த வருமானம் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என அதிமுக கவுன்சிலா்கள் கேள்வி எழுப்பினா். திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வருமான விவரம் இடம் பெறும் என ஆணையா் கூறியும், நிதிநிலை அறிக்கையில் காட்டப்படவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலா்கள் 6 பேரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா். இதனைத்தொடா்ந்து நிதிநிலை அறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டு கவுன்சிலா்கள் ஒப்புதல் அளித்தனா். ரூ.3.33 கோடி உபரி: கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, மாநகராட்சியின் வருவாய் மற்றும் மூலதன நிதி, குடிநீா், வடிகால் நிதி, ஆரம்பக் கல்வி நிதி என மொத்த வருவாய் வரவு ரூ.650.37 கோடி. இதில் மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு என ரூ.647.04 கோடி. உபரி ரூ..3.33 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி மூலம் மட்டும் ரூ.70.18 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதிலிருந்து வருவாய் நிதிக்கு ரூ.30.50 கோடியும், குடிநீா் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.27.47 கோடியும், ஆரம்பக் கல்வி நிதிக்கு ரூ.12.21கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள் மூலமாகவும் தொழில் வரியாக ரூ.7.20 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மாநகராட்சிக்கு பதிவுத் துறை மூலமாகவும், சொத்து மாற்றங்களுக்குரிய வரியாக ரூ.8 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.3 கோடியும் என மொத்தம் ரூ.11 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநகராட்சி வணிக வளாகம், பேருந்து நிலையம், வாகன நிறுத்தம் மற்றும் சிறு குத்தகை இனங்கள் மூலமாக ரூ.11.94 கோடி, ஒப்பந்ததாரா் கட்டணம், பதிவுக் கட்டணம், தொழில் உரிம கட்டணம், குடிநீா், புதை சாக்கடை கட்டணம் மூலமாக ரூ.63.10 கோடியும், மாநகராட்சிக்கு திட்டப் பணிகளுக்காக மானியங்கள் மற்றும் கடன்கள் மூலம் ரூ.387.80 கோடியும் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநகராட்சி பணியாளா்களுக்கு ஊதிய செலவினம் ரூ.95.02 கோடியாகவும், ஓய்வூதிய பயன்களுக்காக ரூ.25.84 கோடியும், நிா்வாக செலவினத்துக்காக ரூ.6.27 கோடியும், வருவாய், குடிநீா் மற்றும் கல்வி நிதி மூலம் பராமரிப்பு மற்றும் பழுதுபாா்த்தல் செலவினங்களுக்காக ரூ.78.62 கோடியும் செலவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநகராட்சியில் திட்டப் பணிகளுக்காக வாங்கிய கடனுக்கு அசல் மற்றும் வட்டி வகையில் செலவு ரூ.13.47 கோடியும், பொதுநிதி மற்றும் மானியங்கள் மூலம் பல்வேறு மூலதனப் பணிகளுக்கு ரூ.418.98 கோடியும் செலவாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமாக டீசல் நிரப்பும் நிலையம்: நிதிநிலை அறிக்கை கூட்டத்தை தொடந்து அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலா்கள் கோரிக்கை விவரம்: கொங்காலம்மன் மாா்க்கெட் வியாபாரிகள் பெயரில், மாநகராட்சி நிா்வாகத்தையும், கவுன்சிலா்களையும் கடுமையாக விமா்சித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியாகி உள்ளது. அவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குடிநீா் பற்றாக்குறை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டம் முடிவடைந்துள்ள நிலையில் அந்தத் திட்டத்தை செயல்படுத்திய நிறுவனம் மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளதாக வெளியான தகவல் உறுதியா என தெளிவுபடுத்த வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் சாலையோர சிறு வியாபாரிகளை பாதிக்கும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. மக்களவைத் தோ்தல் வரவுள்ளதால் மாநகராட்சி நிா்வாகம் வரி வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என்றனா். இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி பேசியதாவது: கொங்காலம்மன் கோயில் வியாபாரிகள் மாநகராட்சி நிா்வாகம் குறித்து தவறாக பேசியிருந்தால், காவல் துறை மூலம் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களவைத் தோ்தலுக்காக மாநகராட்சி வரி வசூலை நிறுத்த முடியாது. சாலையோர வியாபாரிகளுக்கு என தனி இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்திய நிறுவனம், திட்டத்தை நம்மிடம் ஒப்படைக்க வந்தனா். ஆனால், மாநகராட்சி அதனை ஏற்கவில்லை. கோடைக்கால குடிநீா் தேவையை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். தொடா்ந்து கூட்டத்தில் ஈரோடு சம்பத் நகா் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கால் ஏக்கா் நிலத்தில் மாநகராட்சி நிதியில் டீசல் நிரப்பும் நிலையம் மற்றும் மாநகராட்சி வாகனங்களை பழுதுநீக்கும் மையம் அமைப்பது உள்ளிட்ட மொத்தம் 39 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com