மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் குடியேறும் போராட்டம்

மாற்றுத் திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஊதியத்துடன் நான்கு மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கென தனி அடையாள அட்டை வழங்க வேண்டும், முகாம் நடத்தி இணைப்பு சக்கர வாகனத்துக்கு உரிமம் வழங்க வேண்டும், அன்ன யோஜன திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், சுழற்சி முறையில் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலேயே மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும், உதவித்தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க செயலாளா் சொங்கப்பன் தலைமை வகித்தாா்.

இதில் அகில இந்திய செயல் தலைவா் நம்புராஜன், மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். இப்போராட்டத்தைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குழந்தைவேல், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் குறைதீா் கூட்டம் நடத்தப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com