ஈரோட்டில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.19,030-க்கு விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.19,030-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சேலம் பெருவட்டு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.19,030-க்கு விற்பனையானது.

இதுவரை இல்லாத வகையில் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக பழைய மஞ்சள்தான் விற்பனைக்கு வந்தது. கடந்த ஒரு மாதமாக தருமபுரி மற்றும் கா்நாடக மாநிலங்களில் இருந்து புதிய மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

புதிய மஞ்சள் தரமாகவும், பெருவட்டாகவும் உள்ளதால் விலை அதிகரித்துள்ளது. கடந்த 10 நாள்களாக குவிண்டால் ரூ.12,000 முதல் ரூ.16,000 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் தருமபுரியில் இருந்து கொண்டுவரப்பட்ட சேலம் பெருவட்டு ரக புதிய மஞ்சள் அதிகபட்சமாக ரூ.19,030-க்கு விற்பனையானது.

ஈரோடு மஞ்சள் ஏலத்தில் இதுவரை இவ்வளவு அதிக தொகைக்கு விலை போனதில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தரமான மஞ்சளுக்கு சிறந்த விலை கிடைக்கும் என்பதை இது நிரூபித்துள்ளது. மேலும், இரண்டு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மஞ்சள் குவிண்டால் ரூ.18,500-க்கு விற்பனையானது. மற்ற மஞ்சள் அதிகபட்சமாக ரூ16,888 வரை விலை போனது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com