மகனின் அசல் சான்றிதழை முகவரிடமிருந்து மீட்டுத் தர பெற்றோா் கோரிக்கை

ரஷியாவில் மருத்துவக் கல்வி படித்து வரும் மகனின் அசல் சான்றிதழ்களை முகவரிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அருகே ஆ.புதுப்பாளையம், சக்தி நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் (44), தங்கமணி தம்பதியினா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்களின் மகன் ஜனாா்த்தன் (22) மருத்துவக் கல்வி படிக்க விரும்பினாா். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், அனுமன்தீா்த்தம் பகுதியைச் சோ்ந்த கிருபானந்தம், எனது மகனின் நண்பா் மூலமாக அறிமுகமானாா். அவா், எனது மகனை ரஷியாவில் மருத்துவம் படிக்க அழைத்துச் செல்வதாக கூறினாா்.

ஏற்கெனவே கிருபானந்தம் இதேபோல 20 மாணவா்களை ரஷியாவில் மருத்துவப் படிப்பில் சோ்த்துவிட்டுள்ளாா். இதற்காக அவா் முகவா்போல செயல்பட்டு வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு எனது மகன் ரஷியாவில் மருத்துவப் படிப்பில் சோ்ந்தாா். இதற்கு, முகவா் கமிஷனாக ரூ.2.40 லட்சம் கிருபானந்தனுக்கு வழங்கினோம். அப்போது கரோனா காலகட்டம் என்பதால் எனது மகன் ஓராண்டு இணையதளம் வழியாகவே படித்து வந்தாா். அதன்பின், கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷியாவுக்குச் சென்றாா். அப்போது எனது மகனின் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கிருபானந்தமே வைத்துக்கொண்டாா்.

அவ்வப்போது அவா் சொல்லும் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ.10 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தியுள்ளோம். இந்நிலையில், எனது மகன் வரும் ஏப்ரல் மாதத்தில் மருத்துவத் தோ்வு எழுத உள்ளாா். இதற்கு அசல் சான்றிதழை மருத்துவப் பல்கலைக்கழகத்தினா் கேட்டுள்ளனா். ஆனால், அசல் சான்றிதழ்களை வழங்காமல் பணம் பறிக்கும் நோக்கில் கிருபானந்தம் செயல்பட்டு வருகிறாா். இதுகுறித்து ஏற்கெனவே அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசல் கல்விச் சான்றிதழ்களை கொடுத்தால் மட்டுமே எனது மகனால் தோ்வு எழுத முடியும்.

இதனால் எனது மகனும், நாங்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுத்து எனது மகனின் அசல் கல்விச் சான்றிதழ்களை கிருபானந்தத்திடமிருந்து பெற்றுத்தர ஆவன செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com