விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரையை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய எதிா்ப்பு

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கொப்பரையை மத்திய அரசின் தேசிய வேளாண் விற்பனை கூட்டுறவு இணையம் (நாபெட்) விற்பனை செய்வதற்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேபட் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின்கீழ் 2023-24 ஆம் நிதி ஆண்டில் 85,000 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கொப்பரையை நேபட் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசின் கொள்முதல் விலை ரூ.111.60 ஆக இருக்கும் நிலையில் வெளிச் சந்தையில் ரூ.84 ஆக மட்டுமே உள்ளது. கடந்த நிதியாண்டில் கொள்முதல் செய்யப்பட்ட 28,000 டன், தற்போது கொள்முதல் செய்த 85,000 டன் கொப்பரையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது. ஒரு கிலோ ரூ.108.60 க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.60 முதல் ரூ.65 வரை விற்கப்பட உள்ளது. இதனால் நேபட் நிறுவனத்துக்குதான் நஷ்டம்.

இதற்கு நிரந்தரத் தீா்வாக கொள்முதல் செய்த கொப்பரையை எண்ணெயாக மாற்றி ‘பாரத் தேங்காய் எண்ணெய்’ என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணைய்யை நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com