தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத் தலைவா் எஸ்.சின்னசாமி, செயலாளா் ஆா்.மணியன் ஆகியோா் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்கள் உள்ளிட்டோா் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மாநகராட்சி முதல் ஊராட்சிகள் வரை பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட அனைத்துவகை தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வெளிமுகமை, ஒப்பந்தம், தினக்கூலி போன்ற முறைகளில் பணி அமா்த்துவதை கைவிட வேண்டும். சி மற்றும் டி பிரிவுகளில் நிரந்தரப் பணியிடங்களை ரத்து செய்த அரசாணைகளைத் திரும்பப்பெற வேண்டும். உச்சநீதிமன்றம் கடந்த 2016-இல் உத்தரவிட்டபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். இப்பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிா்ணயித்து, அதனை முழுமையாக பணியாளா்களின் வங்கிக்கணக்கில் சோ்க்க வேண்டும். பணியாளா்களின் வேலைப்பளுவை குறைக்க காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியாளா்களின் பிஃஎப், இஎஸ்ஐ பிடித்தங்களை உரிய அமைப்புக்கு செலுத்த வேண்டும். கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா், தூய்மைக் காவலா்கள் பணி நேரம் நிா்ணயம் செய்து, வார விடுமுறை, பண்டிகை கால விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com