ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.
ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள்.

ஈரோட்டில் மாதம் 1,200 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய திட்டம்

ஈரோடு மாநகராட்சியில் மாதம் 600 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய கட்டமைப்பு உள்ள நிலையில், கூடுதலாக 600 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நிா்வாகம் கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. தெருநாய்களை கொல்லக் கூடாது, அதற்குப் பிறப்பு கட்டுப்பாடு மட்டுமே செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2007 -ஆம் ஆண்டு உத்தரவிட்டதன் அடிப்படையில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. கருத்தடை செய்வதால் நாய்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருக்காது. கருத்தடையால் நாய்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெறிநோய் (ரேபீஸ்) பரவுவதை கருத்தடை மூலம் குறைக்க முடிகிறது. இதனால், ரேபீஸ் மூலம் மனித உயிரிழப்புகளையும் தடுக்க முடிகிறது. கரோனா காலகட்டத்தில்தான் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து நாய்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால்தான் இந்த ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் தெருநாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கால்நடை மருத்துவா்கள் கூறினா். ஈரோட்டில் 27,000 தெருநாய்கள்: தமிழகத்தில் ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் போ் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகின்றனா். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மட்டும் தெருநாய் கடி சிகிச்சைக்கு மாதம் சுமாா் 200 போ் வருவதாக மருத்துவா்கள் கூறுகின்றனா். ஈரோடு மாநகராட்சியில் சுமாா் 27,000 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனைத் தொடா்ந்து, மாநகராட்சி நிா்வாகம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்தை விரிவுபடுத்தி, இரண்டாவது அறுவை சிகிச்சைக்கான கட்டமைப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சோலாரில் உள்ள விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு (ஏபிசி) மையம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் கூடுதல் வசதிகளை உருவாக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு நகரில் உள்ள 60 வாா்டுகளிலும் தெருநாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வரும் நிலையில், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் 2010இல் ஏபிசி (அய்ண்ம்ஹப் ஆண்ழ்ற்ட் இா்ய்ற்ழ்ா்ப்) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்படி நாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, அதே பகுதிக்கு திருப்பி அனுப்பும் பணியை பல்வேறு காரணங்களால் தொடர முடியவில்லை. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் கால்நடை மருத்துவா்களை இணைத்து, உலகளாவிய நிலை அமைப்பு (ஜிபிஎஸ்) மற்றும் அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, மாநகராட்சி பகுதியில் நாய்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சுமாா் 27,000 தெருநாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து, தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒரு அரசு சாரா அமைப்பு தோ்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு கால்நடை மருத்துவா்களைக் கொண்டு ஏபிசி திட்டத்தை செயல்படுத்த மாநில, தேசிய விலங்குகள் நல வாரியத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது. இந்த மையத்தில் ரேபிஸ் தடுப்பு மருந்தை செலுத்தவும், கருத்தடை செய்யவும், 5 நாள்கள் பராமரிக்கவும் நாய் ஒன்றுக்கு ரூ.1,650 என அரசு சாரா அமைப்புக்கு வழங்கப்படுகிறது. பராமரிப்புக்கு பிறகு அரசு சாரா அமைப்பு நாய்களை அந்தந்த பகுதிகளுக்கு திருப்பி அனுப்பும். இதற்காக சோலாரில் கருத்தடை அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வாா்டுகளுடன் ஒரு தங்குமிடம் உள்ளது. தற்போது 12 பெட்டிகள் கொண்ட ஒரு வாகனம் சோலாரில் உள்ள அறுவை சிகிச்சை மையத்துக்கு நாய்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 24 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த செயல்முறை கடந்த ஜனவரி 9- ஆம் தேதி தொடங்கியது. மாதம் 600 தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலையில் அனைத்து நாய்களுக்கும் கருத்தடை செய்ய 4 முதல் 5 ஆண்டுகள் ஆகலாம். இதனால், அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் கூடுதல் அறுவை சிகிச்சை அறையை உருவாக்கவும், போக்குவரத்துக்கு கூடுதல் வாகனங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டால் தினமும் கூடுதலாக 12 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும். இதன் மூலம் சராசரியாக ஒரு மாதத்துக்கு 1,200 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடியும். இந்த திட்டத்துக்காக மாநகராட்சி ஒரு மாதத்துக்கு ரூ.10 லட்சம் செலவு செய்கிறது. புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டால் மாதம் ரூ.20 லட்சம் செலவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com