ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற கூட்டுறவு சங்க பணியாளா்கள்.

கூட்டுறவு சங்க பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.எம்.மேசப்பன் தலைமை வகித்தாா். இதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ள நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் புதிய ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்களுக்கு இணையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய பலன்கள், 2021-க்குப் பிறகு ஓய்வுபெற்றவா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை ஏலம் விடும்போது, தங்கத்தின் விலை சரிவினால் வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டால், ஊழியா்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். தள்ளுபடி செய்யப்பட்ட நகை, பயிா் மற்றும் சுயஉதவிக் குழுக் கடனுக்கான வட்டி மற்றும் அசலையும் வங்கிகளுக்கு அரசு திரும்ப தர வேண்டும். செயலாளா்கள் இடமாற்றம் தொடா்பாக குழு அமைக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்ச் 23 -ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும் ஆா்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com