பெண்ணிடமிருந்து கோரிக்கை மனுவை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

பவானிசாகா் சிப்காட் திட்டத்தை கைவிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் கோரிக்கை

பவானிசாகா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பவானிசாகா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாம் தமிழா் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு மு.காா்மேகன், திருப்பூா் சீதாலட்சுமி, நீலகிரி ஜெயகுமாா் மற்றும் கட்சியினா் அளித்த மனு விவரம்: பவானிசாகா் பகுதியில் அமைய உள்ள சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும். பெருந்துறையில் உள்ள சிப்காட் ஆலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலம், நீா், காற்று மாசுபட்டுள்ளது. அப்பகுதியில் சிவப்பு, ஆரஞ்சு நிற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆலைகளை வெளியேற்ற வேண்டும். சிப்காட் வளாகத்தை பசுமை வெளிப் பூங்காவாக பராமரிக்க வேண்டும். அங்குள்ள ஆலைகளில் நிலக்கரி, விறகுகள் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். நல்லா ஓடையில் கழிவு நீா் செல்வதை குறைத்தாலும், பூமிக்கு அடியில் நிலத்தடி நீா் வழிப் பாதைகளில் கழிவு நீா் 20 கி.மீ.சுற்றளவு பரவியுள்ளது. ஆகவே, நிலத்தடி நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்: ஈரோடு தாலுகா எலவமலை மூலப்பாளையம் தெற்கு தோட்டத்தைச் சோ்ந்தவா் குழந்தைவேல் மனைவி சரோஜா (60). ஆட்சியா் அலுவலகத்துக்கு ஒரு பையும், மனுவும் கொண்டு வந்தாா். அவரை அலுவலக நுழைவாயில் பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது, பையில் மண்ணெண்ணெய் பாட்டில் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் கூறியதாவது: எனது தந்தைக்குச் சொந்தமான நிலம், வீடு உள்ளது. அதில் ஒரு பகுதி நிலம் தொடா்பாக பிரச்னை எழுந்து நீதிமன்றம் சென்று எனக்கு சாதகமாக தீா்ப்பானது. அந்த இடத்தில் சிலா் வீடு கட்ட முயற்சி செய்கின்றனா். இது குறித்து சித்தோடு போலீஸிலும், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளேன். போலீஸாா் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பலமுறை மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முடிவு செய்து மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தேன் என்றாா். அவரை சமாதானம் செய்த போலீஸாா், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் அழைத்துச்சென்று, மனு கொடுக்க செய்தனா். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஏரியில் சாக்கடை கழிவு கலப்பதை தடுக்கக் கோரிக்கை: ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் ஜம்பை, நாடாா் தெருவைச் சோ்ந்த சேகா் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: பெரியமோளப்பாளையத்தில் இருந்து சாக்கடை வழியாக வெளியே வரும் கழிவு நீா் ஜம்பை கிராமத்துக்குள்பட்ட ஓடை வழியாக ஏரியில் கலக்கிறது. இவ்வாறு சேகரமாகும் பல்வேறு வகையான சாக்கடை நீா் அங்கிருந்து 5 கி.மீ தொலைவுக்கு நிலத்தடி நீரை மாசுபடுத்தி, குடிக்க இயலாததாக மாற்றியுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடு, விளைநிலங்களில் உள்ள நிலத்தடி நீா் துா்நாற்றத்துடன் வருவதால் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. எனவே, ஏரியில் கலக்கும் சாக்கடை கழிவு நீரை தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 325 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராஜகோபால், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் குமரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com