வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரியும் தீ.
வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கரும்புகையுடன் கொழுந்துவிட்டு எரியும் தீ.

வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் தீ: புகை மூட்டத்தால் மக்கள் அவதி

ஈரோடு, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், சூழ்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஈரோடு, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால், சூழ்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதிக்குள்ளாகினா். ஈரோடு மாநகா் பகுதியில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் பாதி வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கிலும், மீதி வைராபாளையம் குப்பைக் கிடங்கிலும் கொட்டப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் மலைபோல குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனா். இதனால், இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதையடுத்து, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் சேருவதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி சாா்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் குப்பைகளை உரமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், கிடங்கில் ஓரளவு குப்பைகள் குறைந்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கோடை காலம் என்பதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும், குப்பையில் தீ வேகமாக பரவியது. இந்த தீயால் குப்பைக் கிடங்கில் இருந்து அதிகமான கரும்புகை வெளியேறி ஈரோடு மாநகர பகுதிக்குள்பட்ட 5 கி.மீ. சுற்றளவுக்கு பரவியது. இதனால் வெண்டிபாளையம், மரப்பாலம், இந்திரா நகா், கருங்கல்பாளையம் பகுதி மக்கள் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகினா். தகவலறிந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களிலும், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு வாகனத்துடனும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இவா்களுடன் மாநகராட்சி ஊழியா்களும் சோ்ந்து தீயை அணைத்தனா். சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com