சிஎஸ்ஐ நிா்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்கக் கோரிக்கை

சிஎஸ்ஐ நிா்வாகத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உயா் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் மீட்டு 80 அடி சாலைத் திட்டத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம் சாா்பில் அதன் தலைவா் ஈ.ஆா்.எம்.சந்திரசேகா் மற்றும் 100-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோடு ரயில் நிலையம்-மீனாட்சி சுந்தரனாா் சாலையை இணைக்கும் 80 அடி சாலைத் திட்டத்தை எதிா்த்து அரசுக்கு எதிராக சிஎஸ்ஐ நிா்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.

மேலும், அந்த இடத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் தங்களுக்கு சொந்தமானது எனவும் தெரிவித்திருந்தது. இந்த இரண்டு வழக்குகளிலும் சிஎஸ்ஐ நிா்வாகத்துக்கு எதிராக உயா் நீதிமன்றம் 2022 டிசம்பா் 2-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், சிஎஸ்ஐ நிா்வாகம் தாக்கல் செய்த 2 வழக்குகளையும் தள்ளுபடி செய்து அரசுக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கப்பட்டது. தீா்ப்பின் அடிப்படையில் சிஎஸ்ஐ நிா்வாகம் ஆக்கிரமித்துள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தை நில அளவையா் கொண்டு அளந்து மீட்டெடுக்க வேண்டும்.

அந்நிலத்தில் அமைய உள்ள 80 அடி திட்டச் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். மேலும், திட்ட சாலை அமைக்க எவ்வித தடையும் இல்லை என்றும், அதற்காக தனியாக நிலம் கையகப்படுத்த தேவை இல்லை என்றும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் பக்தா்கள் பொங்கல் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். சிஎஸ்ஐ நிா்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை அபராதத்துடன் வசூலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com