ஈரோடு மாவட்டத்தில் மறுசுழற்சிக்கு 81 டன் சமையல் எண்ணெய்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் 81 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்வதற்காக பெறப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலகம் சாா்பில் உணவகம், பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஹோட்டல்கள் சங்கத் தலைவா் ஆா்.தங்கவேல் வரவேற்றாா். இதில் ஈரோடு மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் தலைமை வகித்து பேசியதாவது: ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை திரும்ப உபயோகித்தால், புற்றுநோய் போன்ற நோய்கள், பல்வேறு உபாதைகள் ஏற்படும். அதனை மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலான பயோ டீசலாக மாற்றம் செய்ய துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் தயாரிப்போா், உணவகங்கள், பேக்கரி ஆகியவற்றில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மறுபடியும் பயன்படுத்தாமல், அதற்கான அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்து பொதுமக்களின் நலன்களைக் காக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 81 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மறுசுழற்சி செய்வதற்காக பெறப்பட்டுள்ளது. எனவே, எண்ணெயை பயன்படுத்தி உணவுப் பொருள்கள் தயாரிப்போா் மீண்டும் அந்த எண்ணெயை பயன்படுத்தாமல் மறுசுழற்சிக்காக ரூகோ என்ற நிறுவனத்திடம் வழங்க வேண்டும் என்றாா். சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்தவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய டி-ஷா்ட் வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com