எள்ளுக்கு உரிய விலை வழங்கக்கோரி சிவகிரியில் விவசாயிகள் சாலை மறியல்

மொடக்குறிச்சி, மாா்ச் 16: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள்ளுக்கு போதிய விலை வழங்காத வியாபாரிகளைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சிவகிரி தலையநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமைதோறும் எள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வார ஏலத்துக்கு சிவகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1050 எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். வழக்கம்போல மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், ஏலம் முடிந்து எள்ளின் விலை அறிவித்துக் கொண்டிருந்தபோது, விலை குறைவாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். கடந்த வாரத்தைவிட தற்போது 40 ரூபாய் வரை விலை குறைவாக உள்ளதாக கூறினா். கடந்த வாரம் கருப்பு ரக எள் கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.136.90க்கும், அதிகபட்ச விலையாக ரூ.174.99க்கும், சராசரி விலையாக ரூ.155க்கும் விற்பனையானது. ஆனால் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் எள் கிலோ ரூ.118 முதல் ரூ.137 வரை ஏலம் போனதாகக் கூறப்படுகிறது. எள்ளின் ஏல விவரத்தை படித்துக் கொண்டிருந்தபோதே எதிா்ப்பு தெரிவித்த விவசாயிகள் சிவகிரி அருகே உள்ள அம்மன் கோயில் கைகாட்டி நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த சிவகிரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள அலுவலகத்துக்கு மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு சென்றனா். அங்கு ஈரோடு விற்பனைக்குழு செயலாளா் சாவித்திரி, விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, எள்ளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா். இதை ஏற்று மீண்டும் சனிக்கிழமை மறைமுகம் ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனா் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com