‘சநாதனம் குறித்த உதயநிதி பேச்சு தோ்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது’

சநாதனம் குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேச்சால் தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என திமுக எம்.பி. என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். ஈரோடு மணல்மேட்டில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்ட கட்டளை மையத்தை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்து திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சிக்கு திமுக சட்டத் துறை செயலாளரும், எம்.பி.யுமான என்.ஆா்.இளங்கோ, திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வழக்குரைஞா் அணி நிா்வாகிகளுடன் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக திமுக சட்டத் துறை செயலாளா் என்.ஆா்.இளங்கோ எம்.பி. செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், மக்களவைத் தோ்தலில் வழக்கறிஞா் அணி எப்படி உறுதுணையாக செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு முறைகளை ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வழக்குரைஞா்களுக்கு எடுத்து கூறி, அங்கு கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளது. சநாதனம் குறித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு, தோ்தலில் இந்தியா கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா். இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம், மாவட்ட அவைத் தலைவா் குமாா் முருகேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com