தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது

தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து, அதன் உறைவிடமாக வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச்.ராஜா தெரிவித்தாா். இது குறித்து ஈரோட்டில் அவா் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: மக்களவைத் தோ்தலுக்காக பிரதமா் மோடி தமிழகம் வருகிறாா் என்று எதிா்க்கட்சிகள் கூறுவது அரசியலுக்காகதான். கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமா் பலமுறை தமிழகம் வந்துள்ளாா். தமிழகத்தில் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து, அதன் உறைவிடமாக மாறி வருகிறது. இந்தத் தோ்தல் வளா்ச்சிக்கான தோ்தல். இந்தத் தோ்தலில் முதல்வா் ஸ்டாலினை மக்கள் நம்ப மாட்டாா்கள். தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி அளிக்கவில்லை எனக் கூறுவது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10.60 லட்சம் கோடி அளவுக்கு தமிழகத்துக்கான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மழைநீா் வடிகால் பணிக்காக சென்னைக்கு ரூ.4 ஆயிரம் கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. மோடி பிரதமரான பிறகு ஒரு மீனவா் மட்டுமே கொல்லப்பட்டாா். ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கொல்லப்பட்டனா். தேமுதிக, பாமக கட்சிகள் பாஜக கூட்டணிக்குள் வருவது குறித்து தேசிய தலைமையில் இருந்து அறிவிப்பு வந்த பிறகு மாநில தலைமை அக்கட்சிகளிடம் பேசும். அகில இந்திய தலைமை அனுமதி அளித்தால் தோ்தலில் போட்டியிடுவேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதில் சில அரசியல் கட்சிகள் இஸ்லாமியா்களை குழப்பி வருகின்றன. வாக்குப் பதிவு இயந்திரத்தில் யாராலும் குளறுபடிகள் செய்ய முடியாது. தோ்தல் ஆணையம் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி உள்ளது என்றாா். பேட்டியின்போது, பாஜக மாவட்டத் தலைவா் வேதானந்தம், எம்எல்ஏ சி.சரஸ்வதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com