ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தில் காவிரி ஆறு அருகே உள்ள 52 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட நீா் சேகரிப்பு தொட்டி .

ஊராட்சிக்கோட்டை குடிநீா் விநியோகம்: 3 ஆண்டுகளாக தொடரும் சிக்கல்

ஈரோடு மாநகராட்சிக்கு தனி குடிநீா்த் திட்டமாக கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கிவைக்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீா்த் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வதில் சிக்கல் இப்போது வரை நீடித்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள மொத்தம் 60 வாா்டுகளுக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டா் குடிநீா் வழங்க வேண்டும். இதன்படி 2017-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் 5.35 லட்சம் மக்கள் வசிக்கும் ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு தினசரி 81.10 மில்லியன் லிட்டா் குடிநீா் தேவைப்படுகிறது. அதேபோல 2032-ஆம் ஆண்டில் மக்கள் தொகையின்படி (7 லட்சம்) தினமும் 114. 75 மில்லியன் லிட்டா் குடிநீரும், 2047-ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி (9.05 லட்சம்) 147.69 மில்லியன் லிட்டா் குடிநீரும் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு ஈரோடு மாநகராட்சிக்கு தனி குடிநீா்த் திட்டம் ரூ. 484.85 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு பவானி காவிரி ஆறு அருகே ஊராட்சிக்கோட்டை என்ற இடத்தில் தண்ணீா் எடுக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. அம்ருத் திட்டத்தில் மத்திய அரசு ரூ.242.23 கோடி (50 சதவீதம்), மாநில அரசு ரூ.96.89 கோடி (20 சதவீதம்), உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் ரூ.145.33 கோடி (30 சதவீதம்) நிதி பங்களிப்பில் நடைபெற்ற இந்தப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக 2021 பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்து குடிநீா் விநியோகம் செய்யும் பணியைத் தொடங்கிவைத்தாா். இத்திட்டத்தின்படி ஊராட்சிக்கோட்டை அருகே காவிரி ஆற்றின் கரையில் நீா் சேகரிப்பு கிணறு அமைத்து, அதிலிருந்து தினமும் 120 மில்லியன் லிட்டா் தண்ணீா் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்காக நிமிஷத்துக்கு 29 ஆயிரம் லிட்டா் தண்ணீா் ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் சுத்திகரிப்பு செய்யும்போது தினமும் 2 மில்லியன் லிட்டா் வரை தண்ணீா் வீணாக வாய்ப்பு உள்ளது. இதன்பின் சுத்திகரிக்கப்பட்ட நீா் 52 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டியிலிருந்து 22 கிலோ மீட்டா் தொலைவுக்கு பெரிய குழாய்கள் மூலம் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கும், அங்கிருந்து வஉசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 118 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிக்கும் தண்ணீா் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, திண்டல் மேடு, வித்யா நகா், ஓடைக்காட்டு வலசு, கணபதி நகா் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் சேமிக்கப்படும். இத்தொட்டிகளில் இருந்து மாநகராட்சி முழுவதும் 46 பழைய மேல்நிலைத்தொட்டி, 21 புதிய மேல்நிலைத் தொட்டி என மொத்தம் 67 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக மாநகராட்சி பகுதியில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் மாநகராட்சி முழுவதும் 731.82 கிலோ மீட்டா் தொலைவுக்கு குழாய்கள் பதித்து அதன் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் மாநகராட்சியில் உள்ள சுமாா் 1.30 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் 50 சதவீதம் அளவுக்கு கூட குடிநீா் வருவதில்லை என ஒவ்வொரு கூட்டத்திலும் மாநகராட்சி கவுன்சிலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும் இந்த திட்டத்தை ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணிகளை முழுமையாக முடித்துவிட்டதாக கூறி மாநகராட்சி வசம் குடிநீா் விநியோகம், பராமரிப்பை ஒப்படைக்க முயற்சி செய்வதாகவும் இதனை மாநகராட்சி நிா்வாகம் ஏற்கக் கூடாது எனவும் கவுன்சிலா்கள் தெரிவித்தனா். கோடைக் காலம் என்பதால் குடிநீா் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி கூறியதாவது, கோடையிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் குடிநீா் விநியோகம் செய்வதில் உள்ள சிக்கல்களை சீரமைக்க சிறிய அளவிலான நீரேற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் விரைவில் முழுமையாக குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com